சங்கரன்கோவில் தீப்பெட்டி தொழிற்சாலையில் தீ விபத்து

தீப்பெட்டி தொழிற்சாலையில் தீ விபத்து;

Update: 2025-02-17 07:41 GMT
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் புதுமனை 3ம் தெரு தெருவைச் சேர்ந்தவர் நந்தகுமார் (வயது 45). இவர் அந்த பகுதியில் தீப்பெட்டி ஆலை நடத்தி வருகிறார். இந்நிலையில் இன்று காலையில் தீப்பெட்டி ஆலையில் இருந்து திடீரென புகை வெளியேறியது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக இதுபற்றி சங்கரன்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அப்போது காற்றின் வேகம் காரணமாக தீப்பெட்டி ஆலையில் தீப்பற்றி எரியத் தொடங்கியது. ஆலையில் உள்ள தீக்குச்சிகள் எரிந்ததால், அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய அலுவலர் செல்வம் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதில், ஆலையில் இருந்த தீக்குச்சிகள் எரிந்து கருகின. தீப்பிடித்தது காலை நேரம் என்பதால் ஆலையில் தொழிலாளர்கள் பணியில் இல்லை. இதனால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து சங்கரன்கோவில் டவுன் போலீஸ் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தீப்பெட்டி தொழிற்சாலை விபத்து குறித்து சங்கரன்கோவில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்த தீப்பெட்டி தொழிற்சாலையில் திடீரென தீப்பிடித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Similar News