தீயில் எரிந்து கூரை வீடு நாசம்
பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.8 ஆயிரம் நிவாரணம்;
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றிடம் எரவாஞ்சேரி ஊராட்சி மத்தியக்குடி கன்னி கோவில் தெருவை சேர்ந்தவர் காளியப்பன். இவரது மகன் ரவி. விவசாய கூலி தொழிலாளி. நேற்று முன் தினம் இரவு ரவி, அவரது மனைவி பஞ்சவர்ணம், மகன்கள் ராமன், லட்சுமணன், ரகுவரன், லட்சுமணன் மனைவி பிரியா மற்றும் ஒரு வயது குழந்தை ஆகியோர் வெளியூர் சென்று உள்ளனர். அப்போது, அவரது கூரை வீட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. தீவிபத்து ஏற்பட்ட போது அருகில் இருந்தவர்கள் சத்தம் கேட்டு, வெளியே ஓடி வந்தனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு ஓ.என்.ஜி.சி தீயணைப்பு வீரர்கள் வந்து, மேலும் தீ பரவாமல் தடுத்து அணைத்தனர். இருப்பினும் வீடு முழுவதும் எரிந்து நாசமானது. இதில், வீட்டில் இருந்த டி.வி, மின்விசிறி, பீரோ உள்ளிட்ட பொருட்கள் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தது. கிராம நிர்வாக அலுவலர் வெங்கட்ராமன், திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.டி.எஸ்.சரவணன், அதிமுக தெற்கு ஒன்றிய செயலாளர் பக்கிரிசாமி ஆகியோர் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி, அரசு சார்பில் வழங்கப்பட்ட ரூ.8 ஆயிரம் பணம் மற்றும் நிவாரண பொருட்களை வழங்கினர்.