தஞ்சாவூா் மாநகரிலுள்ள இறைச்சி கடைகளில் மாநகராட்சி அலுவலா்கள் ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்ட சோதனையில் 500 கிலோ நெகிழிப் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டது. தஞ்சாவூா் கீழவாசல் பகுதியிலுள்ள இறைச்சி கடைகளில் மாநகராட்சி அலுவலா்கள் சோதனை மேற்கொண்டனா். இதில், 20 கடைகளில் தடை செய்யப்பட்ட 500 கிலோ நெகிழிப் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடா்பாக கடை உரிமையாளா்களுக்கு மொத்தம் ரூ. 3 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு, வசூலிக்கப்பட்டது. இந்தச் சோதனை தொடா்ந்து மேற்கொள்ளப்படும் என்றும், தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாநகராட்சி அலுவலா்கள் எச்சரித்தனா்.