செல்வ செழிப்பை ஏற்படுத்தும் வாராகி அம்மனுக்கு
நெய் தீபம் ஏற்றி பெண்கள் வழிபாடு;
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த மறைஞாயநல்லூரில், மேலமறைக்காடர் உடனுறை வேதநாயகி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில், வாராகி அம்மன் தனி சன்னதியில் அருள் பாலிக்கிறார். தேய்பிறை பஞ்சமி அன்று, வாராகி அம்மனை வழிபட்டால், குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். குடும்பத்தில் செல்வ செழிப்பை ஏற்படுத்தும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை. இக்கோவிலில், பஞ்சமி தினத்தில் வாராஹி அம்மனுக்கு மஞ்சள், திரவியம், பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், சந்தனம் என 16 வகையான வாசனாதி திரவியங்களைக் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, சிறப்பு புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு வடை மாலை, மஞ்சள் மாலை சாத்தப்பட்டு, மகா தீபாராதனையும், சிறப்பு ஆராதனைகளும், கூட்டு வழிபாடும் நடைபெற்றது. பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த ஏராளமான பெண்கள், வாழை இலையில் பச்சரிசி, வெல்லம், பழங்கள், தேங்காய் வைத்து நெய் தீபம் ஏற்றி வாராஹி அம்மனை தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.