தங்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை ஆணையர் நிறைவேற்றவில்லை எனில் நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தூய்மை பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஏஐடியூசி தேசிய நிர்வாக குழு உறுப்பினர் சந்திரகுமார், மாநில செயலர் தில்லைவனம் அரசு பணியாளர் சங்க முன்னாள் மாநில தலைவர் தர்மகருணாநிதி ஆகியோர் தலைமையில் தூய்மை பணியாளர்கள் தஞ்சை மாந கராட்சி அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியது: மாநகராட்சி ஆணையர் கூறியபடி உறுதிமொழியை நிறைவேற்றவில்லையெனில் நாளை (19ம் தேதி) முதல் தஞ்சை துாய்மை பணியாளர்கள் கால வரையறையற்ற வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளோம். மாநகராட்சி துாய்மை பணியாளர்களின் கோரிக்கைகள் குறித்து கடந்த 7ம்தேதி வேலை நிறுத்தம் நடந்தது. இதையடுத்து கடந்த 8ம் தேதி அன்று மாநகராட்சி ஆணையர், ஒப்பந்தக்காரர், துாய்மை பணியாளர் சங்க நிர்வாகிகள் அடங்கிய முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது. அதில் 5ம் தேதிக்குள் சம்பளம் வழங்கவும், தூய்மை பணியாளர்கள் ஒப்பந்த நகல் வழங்குவதாகவும், பிப்ரவரி 15க்குள் வருங்கால வைப்பு நிதி தொகையை செலுத்துவதாகவும் இந்த கோரிக்கை குறித்து நிறைவேற்ற ஒரு மாதம் அவகாசம் ஆணையர் தரப்பில் கேட்டு உறுதி அளிக்கப்பட்டது. ஆனால் இது நாள் வரை ஒரு கோரிக்கை கூட நிறைவேற்றவில்லை. எனவே நாளை (19ம்) தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடைபெறும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.