புதிய கல்விக் கொள்கையை தமிழகம் ஏற்காததால் கல்வி மானியம் விடுவிக்கப்படாது
அமைச்சரின் பேச்சு கண்டனத்துக்குரியது - கலை இலக்கிய பெருமன்ற கூட்டத்தில் தீர்மானம்;
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற நாகை மாவட்டக் குழுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு, மாவட்டத் தலைவர் குமார் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் அம்பிகாபதி, மாநிலக் குழு உறுப்பினர் சுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைத் தலைவர் பார்த்தசாரதி, நல்லாசிரியர் வைரக்கண்ணு, கிளைச் செயலாளர் குழந்தைவேல், நிர்வாகிகள் குணசேகரன், செந்தில்நாதன், சத்யராஜ் ஆகியோர் பேசினர். கூட்டத்தில், உலக தாய்மொழி நாள், உலக மகளிர் தின நாள் மற்றும் மக்கள் கலை விழா ஆகியவற்றை நடத்துவது தொடர்பாக முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில், மத்திய அரசின் புதிய மும்மொழி கல்விக் கொள்கை சமூக நீதிக்கு எதிராக இருப்பதால், அதனை தமிழகம் ஏற்கவில்லை. இந்நிலையில், புதிய கல்விக் கொள்கையை தமிழகம் ஏற்காததால், கல்விக்கான மானியம் விடுவிக்கப்படாது என மத்திய கல்வி அமைச்சர் கூறி இருப்பது, கூட்டாட்சி இறையான்மைக்கு எதிரானது மட்டுமின்றி கண்டனத்துக்குரியது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.