குப்பைகளை தரம்பிரித்து சேகரம் செய்தல் உள்ளிட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு
தூய்மைப் பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை முறையாக தரம் பிரித்து வாங்குகின்றார்களா என்று அப்பகுதி குடியிருப்புவாசிகளிடம் கேட்டறிந்தார். தூய்மைப்பணியாளர்கள் குப்பை சேகரிக்கும் வாகனத்தில் தரம் பிரித்து குப்பைகளை வைக்கப்பட்டுள்ளதா என்று பார்வையிட்டார்;
பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தின் செயல்பாடு, குடியிருப்புகளில் குப்பைகளை தரம்பிரித்து சேகரம் செய்தல் உள்ளிட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தின் செயல்பாடு, குடியிருப்புகளில் குப்பைகளை தரம்பிரித்து சேகரம் செய்தல் உள்ளிட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் இன்று (18.02.2025) திடீர் ஆய்வு மேற்கொண்டார். பெரம்பலூர் நகராட்சி வார்டு எண் 5, கம்பன் தெரு, வார்டு எண் 3, டயானா நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் தூய்மைப் பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை முறையாக தரம் பிரித்து வாங்குகின்றார்களா என்று அப்பகுதி குடியிருப்புவாசிகளிடம் கேட்டறிந்தார். தூய்மைப்பணியாளர்கள் குப்பை சேகரிக்கும் வாகனத்தில் தரம் பிரித்து குப்பைகளை வைக்கப்பட்டுள்ளதா என்று பார்வையிட்ட மாவட்ட ஆட்சித்தலைவர், வீடுதேடி குப்பைகளை சேகரம் செய்ய வருபவர்களிடம், மக்கும் குப்பை மக்காத குப்பைகளை தரம் பிரித்து தனித்தனி குப்பை தொட்டிகளில் வைத்து கொடுக்க வேண்டும் என்று குடியிருப்புவாசிகளிடம் கேட்டுக்கொண்டார். அதனைத்தொடர்நது முத்துநகர் தொடக்கப்பள்ளியில், முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தில் மாணவர்களுக்கு உணவு தயாரிக்கும் மைய சமையற்கூடத்தை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர், அங்கு சமைப்பதற்கு பயன்படுத்தப்படும் உணவுப்பொருட்களின் தரம் குறித்தும், சமைப்பதற்கு பயன்படுத்திய பாத்திரங்களை கழுவும் இடம், உணவுப்பொருட்களின் வைப்பறை உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்திற்காக எவ்வளவு உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது, அதில் எவ்வளவு பயன்படுத்தப்பட்டுள்ளது, பள்ளியில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப முறையாக உணவுப்பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்து, உணவுப்பொருட்களின் இருப்பு குறித்த பதிவேட்டினையும் ஆய்வு செய்தார். சமையலறைகள் சுகாதாரமாக இருக்க வேண்டும் என்றும், உணவு மிகவும் தரமானதாகவும், சுவையாகவும் இருக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் சமையலர்களுக்கு அறிவுறுத்தினார். அதனைத்தொடர்ந்து எளம்பலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலும் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தின் செயல்பாடு குறித்து மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு, இரண்டு இடங்களிலும் மாணவர்களுக்கு சமைக்கப்பட்டிருந்த உணவின் தரம் குறித்து சாப்பிட்டுப்பார்த்து ஆய்வுசெய்தார். பின்னர் மாணவர்களின் வகுப்பறைகளை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் வகுப்பறையில் மாணவர்கள் அமர்வதற்காக வழங்கப்பட்டள்ள பெஞ்ச் மற்றும் டேபிள்கள் வகுப்பறையில் ஓரமாக அடுக்கி வைக்கப்பட்டிருந்ததையும், மாணவர்கள் தரையில் அமர்ந்திருந்ததையும் பார்த்த மாவட்ட ஆட்சியர் பள்ளி தலைமையாசிரியரை அழைத்து, மாணவர்களின் நலனுக்காகத்தான் அரசின் சார்பில் பல்வேறு வசதிகள் செய்து தரப்படுகின்றது, அவர்கள் அமருவதற்காகத்தான் இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளது அதை ஏன் பயன்படுத்தாமல் உள்ளீர்கள் என கேட்டு, உடனடியாக இருக்கைகளை சுத்தம் செய்து வகுப்பறையில் போடச்சொல்லி அறிவுறுத்தினார். இருக்கைகள் போடப்பட்டு மாணவர்கள் அதில் அமர்ந்த பிறகே மாவட்ட ஆட்சியர் அங்கிருந்து கிளம்பினார். அதனைத்தொடர்ந்து, பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் இயங்கி வந்த தினசரி காய்கனி சந்தையின் பழுதடைந்த கட்டங்கள் இடிக்கப்பட்டுள்ள பகுதிகளை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.248 லட்சம் மதிப்பீட்டில் 115 கடைகள் கட்டும் பணியினை விரைந்து மேற்கொண்டு குறித்த காலத்திற்குள் பணியினை முடித்திட நகராட்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், தினசரி காய்கனி சந்தைக்கான புதிய கட்டடங்கள் கட்டப்படும் வரை, தற்காலிகமாக உழவர் சந்தை அருகில் தினசரி காய்கனி சந்தை செயல்படும் வகையில் கடைகள் அமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டு, இங்கு வியாபாரிகளை அழைத்துவந்து கடை அமைப்பதற்கும், தற்காலிகமாக இந்த இடத்தில் காய்கனி கடைகள் இருப்பதை மக்களுக்கு தெரியும் வகையில் விளம்பரப்படுத்த நகராட்சி ஆணையருக்கு அறிவுறுதுதினார். பின்னர், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் 2023-24ன் கீழ் புதிய பேருந்து நிலையத்தில் ரூ.372.00 லட்சம் மதிப்பீட்டில் 12 பேருந்துகள் நிறுத்தும் வகையிலான பேருந்து நிறுத்தங்களும், 14 கடைகளும், கழிவறை வசதிகளுடன் ஒரு உணவகம் கட்டும் பணிகள் நடைபெறுவதை பார்வையிட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நகராட்சி ஆணையருக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது நகராட்சி ஆணையர் ராமர், பெரம்பலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வகுமார் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.