புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வலியுறுத்தி
ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கோரிக்கை அட்டை அணிந்து போராட்டம்;
2003 -ம் ஆண்டுக்கு பிறகு பணியில் சேர்ந்த ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் கிடையாது. அவர்கள் பங்களிப்பு ஊதிய திட்டத்தில் பணியாற்றி வருகின்றனர். இந்த திட்டத்தின் கீழ், ஓய்வு பெறுபவர்களுக்கோ அல்லது பணியின் போது இறப்பவர்களுக்கோ ஓய்வூதியம் கிடையாது. சுமார் 20 ஆண்டுகளாக பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி, பல்வேறு வகையான போராட்டங்களை இயக்கங்கள் நடத்தி வருகிறது."சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம்" இதை ஒற்றைக் கோரிக்கையாக வைத்து போராடி வருகிறது. ஆளும் திமுக அரசு, 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் அறிக்கையாக, சிபிஎஸ் திட்டத்தை ஒழித்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வருவோம் என 309 -வது வாக்குறுதியாக அளித்திருந்தது. ஆனால், தற்போது அதற்கு மாறாக, ஓய்வூதிய திட்டம் பற்றி ஆராய்வதற்கு 9 மாதகால அவகாசத்துடன் குழு அமைத்து உள்ளது. இதனால், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர். எனவே, தங்களது உணர்வுகளை அரசுக்கு வெளிப்படுத்த, நேற்று கோரிக்கை அட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனர். நாகை மாவட்டம் சிக்கல் மேல்நிலைப்பள்ளி, ஒரத்தூர் சிதம்பரனார் நடுநிலைப்பள்ளி, வட்டார கல்வி அலுவலகம், முதன்மை கல்வி அலுவலகம் , ஊராட்சி வளர்ச்சி அலுவலகம், அரசு தொழிற்பயிற்சி நிலையம், ஏடிஎம் கல்லூரி உள்ளிட்ட பெரும்பாலான அலுவலகங்கள், பள்ளிகளில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரித்தனர். இதற்கான ஏற்பாடுகளை, மாநில இணை ஒருங்கிணைப்பாளர் எம்.ஆர்.சுப்பிரமணியன், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் மாவட்ட தலைவர் மோகன், தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் மாவட்டத் தலைவர் நாகராஜன், முதுநிலை பட்டதாரி கழகத்தின் மாவட்ட செயலாளர் செங்குட்டுவன், பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அசோக், எஸ்எஸ்டிஏ ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கியதாஸ் ஆகியோர் செய்து இருந்தனர். சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் மாவட்ட தொடர்பாளர் பாலசண்முகம் கூறுகையில் தேர்வு காலம் மற்றும் பட்ஜெட் தொடர்பான வேலைகள் இருப்பதினால் ஆசிரியர்கள், மாணவர்களுக்கும், பொது மக்களுக்கும், இடையூறு ஏற்படாத வகையில், கோரிக்கை அட்டை அணிந்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி உள்ளனர். அரசு மூன்று நபர் குழுவை வாபஸ் பெற்று, பழைய ஓய்வூதிய திட்டத்தை அறிவிக்காவிட்டால் மாநில அமைப்பின் முடிவின்படி, வருகிற மார்ச் மாதம் 7-ம் தேதி அலுவலக முற்றுகை மறியல் போராட்டம் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.