ஒன்றிய அமைச்சரின் ஆணவப் பேச்சுக்கு தமிழக மக்கள் புரட்சிக் கழகம் கண்டனம்
கண்டனம்;
தேசியக் கல்விக் கொள்கையை, தமிழக அரசு ஏற்றுக்கொண்டால் தான் தமிழக கல்வித் துறைக்கு வழங்க வேண்டிய நிதி விடுவிக்கப்படும் என ஆணவமாகப் பேசிய ஒன்றிய அரசின் கல்வி அமைச்சருக்கு தமிழக மக்கள் புரட்சிக் கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக புரட்சிக் கழக மாநில தலைவர் அரங்க.குணசேகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, இந்தியை திணிப்பதற்காக குறுக்கு வழியில் தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால்தான் சமக்ர சிக்சா திட்டத்தின் கீழ் தமிழ்நாடு கல்வித்துறைக்கு வழங்க வேண்டிய ரூ.2,158 கோடியை விடுவிக்க முடியும் என ஒன்றிய அரசின் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆணவமாக பேசியுள்ளதற்கு தமிழக மக்கள் புரட்சிக் கழகம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. நிதியை அளிக்க மாட்டோம் என்பது, தொடர்ந்து தமிழ்நாட்டை பலமுனைகளிலும் வஞ்சிப்பதை ஒன்றிய அரசு வாடிக்கையாக வைத்துள்ளது. மீண்டும், மீண்டும் ஒன்றிய அரசு இந்தியை திணிக்க நினைத்தால் தமிழ்நாடு இந்தியக் கூட்டாட்சியில் தொடர்வதா, வேண்டாமா என்பதை தமிழ்நாட்டு மக்கள் தீர்மானிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்பதை ஒன்றிய ஆட்சியாளர்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். தமிழகத்திலிருந்து கோடிக்கணக்கில் ஜிஎஸ்டி வரியையும், பொதுத்துறை வருமானங்களையும் கொடுத்து விட்டு தமிழகத்திற்கு உரிய பங்கைத்தான் கேட்கிறோம், பிச்சை கேட்கவில்லை என்பதை பாஜக அரசு புரிந்து கொள்ள வேண்டும். தொடர்ந்து மிரட்டல் பேச்சு பேசினால், பாஜக அமைச்சர்களும், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் தமிழ்நாட்டில் எங்கும் நடமாட முடியாது என்று எச்சரிக்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.