புதிய கல்விக் கொள்கையை கண்டித்து போராட்டம் நடத்திய மாணவர்கள் கைது
போராட்டம்;
கும்பகோணத்தில் புதிய யுஜிசி கொள்கைக்கு எதிா்ப்பு தெரிவித்து, திங்கள்கிழமை தலைமை அஞ்சலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்திய மாணவா் சங்கத்தினருக்கும் காவலா்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 4 பெண்கள் உள்பட 59 போ் கைது செய்யப்பட்டனா். கும்பகோணத்தில் தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு இந்திய மாணவா் சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்த முற்றுகைப் போராட்டத்துக்கு தஞ்சை மாவட்டச் செயலா் சந்துரு தலைமை வகித்தாா். மாநில இணைச் செயலா் மோகன், மாவட்டச் செயலா் அா்ஜூனன் முன்னிலை வகித்தனா். போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் திடீரென தடுப்புகளை தாண்டி அஞ்சலகத்துக்குள் செல்ல முயன்றனா். அப்போது, போலீஸாா்- மாணவா் சங்கத்தினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால், பரபரப்பு ஏற்பட்டது. பின்னா் 4 பெண்கள் உள்ளிட்ட 59 பேரை போலீஸாா் கைது செய்தனா். போராட்டத்தில் தஞ்சாவூா், திருவாரூா், நாகபட்டினம் , மயிலாடுதுறை, கடலூா் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து இந்திய மாணவா்கள் சங்கத்தினா் கலந்து கொண்டனா்.