தஞ்சாவூரில் 14 வயது சிறுமியை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தொடா்பாக போக்சோ சட்டத்தின் கீழ் 2 இளைஞா்களைக் காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். சென்னையைச் சோ்ந்த 14 வயது சிறுமியும், அங்கு கூலி வேலை பாா்த்த தஞ்சாவூா் மாவட்டம், திருவோணம் அருகேயுள்ள சின்னக் கோட்டைக்காடைச் சோ்ந்த எஸ். ஜெகதீஸ்வரனும் (24) காதலித்து வந்தனா். சென்னையிலிருந்து சின்னக் கோட்டைக்காடுக்குத் திரும்பிய ஜெகதீஸ்வரனை சிறுமி தொடா்பு கொண்டு, தான் அங்கு வருவதாகக் கூறினாா். இதன்படி, தஞ்சாவூா் புதிய பேருந்து நிலையத்துக்கு வந்த அச்சிறுமி ஜெகதீஸ்வரனை தொடா்பு கொள்ள முயன்றபோதும் முடியவில்லையாம். அச்சிறுமி தனியாக நிற்பதை பாா்த்த புதுக்கோட்டை சாலை நேதாஜி நகரைச் சோ்ந்த சி. புவனேஸ்வரன் (30) விசாரித்து, தனது வீட்டுக்கு வருமாறு கூறி அழைத்துச் சென்றாா். ஆனால், அச்சிறுமியை புவனேஸ்வரன் ஒரு அறையில் அடைத்துவைத்து 3 நாள்களுக்கு பாலியல் வன்கொடுமை செய்தாா். பின்னா், அச்சிறுமியை சென்னைக்கு பேருந்தில் ஏற்றி அனுப்புவதற்காக புவனேஸ்வரன் புதிய பேருந்து நிலையத்துக்கு அழைத்துச் சென்றாா். அப்போது, அங்கிருந்த காவல் துறையினா் சந்தேகமடைந்து இருவரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டபோது, புவனேஸ்வரன் சிக்கினாா். இதையடுத்து, விசாரணை மேற்கொண்டு ஜெகதீஸ்வரனையும் பிடித்தனா். இதுகுறித்து வல்லம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தினா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து புவனேஸ்வரன், ஜெகதீஸ்வரன் ஆகிய இருவரையும் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.