கண்ணாடி பாலம் குறித்து அவதூறு ; திமுக சார்பில் புகார்
திருவள்ளுவர் சிலை;
கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை விவேகானந்தர் மண்டபம் இடையே தமிழக அரசு சார்பில் உலகமே வியக்கும் அளவில் கண்ணாடி பாலத்தினை தமிழக அரசு கட்டி, முதல்வர் மு க ஸ்டாலின் கடந்த டிசம்பர் 31 ஆம் நாள் திறந்து வைத்தார். உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தினமும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் இந்த பாலத்தினை பார்வையிட்டு வியந்து தமிழக அரசை பாராட்டி வருகின்றனர். தற்போது இந்தியாவின் தென்கோடி அடையாளமாக இந்த கண்ணாடி பாலம் மாறி வருகிறது. இந்நிலையில் தமிழக அரசின் இந்த மாபெரும் சாதனையை பொறுத்துக் கொள்ள முடியாத ஒரு கட்சியின் பின்பலம் கொண்ட நாகர்கோவிலைச் சேர்ந்த நபர் ஒருவர் சமூக வலைதளங்களில் கண்ணாடி பாலத்தில் சேதம் அடைந்துள்ளதாக தவறான தகவலை சமூக வலைதளங்களில் வெளியிட்டு சுற்றுலா பயணிகளை அச்சம் அடைய செய்துள்ளார். இதனை கண்டித்தும், அந்த நபர் மீது சட்டரீதிய நடவடிக்கை எடுக்க கோரி கன்னியாகுமரி காவல் நிலையத்தில் திமுக சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. கவுன்சிலர்கள் இந்திரா, பூலோக ராஜா, இக்பால், குமரி சிவா, நிர்வாகிகள் ஆனந்த், பிரைட்டன், ஆண்டனி, ஆகியோர் உடன் இருந்தனர்.