அரசு செயல்படுத்தும் அனைத்து திட்டங்களையும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்த வேண்டும்

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட கள ஆய்வில் அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுரை;

Update: 2025-02-19 11:46 GMT
மக்களை நாடி, மக்கள் குறைகளை கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண, அரசு இயந்திரம் களத்திற்கே வரும் “உங்களை தேடி, உங்கள் ஊரில்” என்ற திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும், இனி ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் வட்ட அளவில் கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும், தங்கு தடையின்றி மக்களைச் சென்று அடைவதை உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, “உங்களை தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ், நாகை மாவட்டம் வேதாரண்யம் வட்டத்தில், மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் அரசு அலுவலகங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து, கள ஆய்வு மேற்க்கொண்டார். அதன் அடிப்படையில், வேதாரண்யம் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற, மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாமில் கலந்து கொண்டார். பின்னர், வேதாரண்யம் வட்டாட்சியர் அலுவலகத்தில், மாவட்ட அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளவும், தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் அனைத்து திட்டங்களும், பொதுமக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் செயல்படுத்த வேண்டும் என துறை சார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். கூட்டத்தில், துறை சார்ந்த அலுவலர்களுக்கு, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வருவாய் கிராமங்கள், ஊராட்சிகளில் ஆய்வு செய்யப்பட்ட அறிக்கைகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, ஆய்வு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. கள ஆய்வில், வேதாரண்யம் வருவாய் கோட்டாட்சியர் திருமால், வேதாரண்யம் வட்டாட்சியர் சக்கரவர்த்தி, வேதாரண்யம் நகராட்சி ஆணையர் சித்ரா சோனியா, நகர பணி மேற்பார்வையாளர் குமரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அண்ணாதுரை, கருணாநிதி, ராஜீ, சிங்காரவேலு, வேளாண்மை துறை அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Similar News