கர்ப்பிணிப் பெண்களுக்கான தாய் சேய் நலம் குறித்த சிறப்பு பரிசோதனை

வளமிகு வட்டார வளர்ச்சி திட்டத்தின் மூலமாக முற்றிலும் இலவசமாக 5 சிறப்பு பரிசோதனைகளை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செய்து கொள்ளலாம். இப்பரிசோதனைகளை கர்ப்பிணி பெண்கள் செய்து கொண்டு, மருத்துவர்கள் அறிவுறுத்தலின்படி உணவு, ஊட்டச்சத்து மருந்து,மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டும்.;

Update: 2025-02-19 15:32 GMT
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில், பதிவு செய்யப்படும் கர்ப்பிணிப் பெண்களுக்கான தாய் சேய் நலம் குறித்த சிறப்பு பரிசோதனை முகாமினை மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் ஆய்வு. பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியம் கொளக்காநத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வளமிகு வட்டார வளர்ச்சி திட்டத்தின் கீழ், மாநில திட்டக்குழு மற்றும் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் நடைபெற்ற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பதிவு செய்யப்படும் கர்ப்பிணி பெண்களுக்கான தைராய்டு, இருதய பரிசோதனை, சராசரி சர்க்கரை அளவு மற்றும் சிசு குறைபாடு உள்ளிட்ட சிறப்பு பரிசோதனைகள் செய்யப்படும் முகாமினை மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் இன்று (19.02.2025) பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த முகாமினை பார்வையிட்டு தொடங்கி வைத்து மாவட்ட ஆட்சியர் பெரம்பலூர் மாவட்டத்தில் ஆலத்தூர் மற்றும் வேப்பந்தட்டை வட்டாரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வளமிகு வட்டாரம் வளர்ச்சி திட்டத்தின் கீழ் இவ்வட்டாரங்களில் அனைத்து வளர்ச்சித் திட்டங்களும் மாநில திட்டக்குழு பரிந்துரைப்பின்படி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் பொது சுகாதாரம், நோய் தடுப்பு மருந்துத்துறையின் சார்பில், ஆலத்தூர் மற்றும் வேப்பந்தட்டை வட்டாரங்களில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பதிவு செய்துள்ள கர்ப்பிணி பெண்களுக்கு, அவ்வட்டாரத்திற்குட்பட்ட ஆரம்ப பொது சுகாதார நிலையத்திலேயே கர்ப்பிணிகளுக்கான தாய் சேய் நல சிறப்பு பரிசோதனைகளான தைராய்டு, சராசரி சர்க்கரை அளவு, ஹெப்பாட்டிட்டீஸ் பி, இருதய பரிசோதனை மற்றும் சிசு குறைபாடு கண்டறியும் பரிசோதனை உள்ளிட்ட 5 வகையான பரிசோதனைகளை மேற்கொள்ளும் சிறப்பு முகாம் பிரதி வாரம் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும். அதனடிப்படையில் ஆலத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று சிறப்பு பரிசோதனை முகாம் நடைபெறுகிறது. கர்ப்பிணிப் பெண்களுக்கான இச்சிறப்பு பரிசோதனை முகாம் வாயிலாக ஆலத்தூர் வட்டாரத்தில் 2,234 கர்ப்பிணி பெண்களும், வேப்பந்தட்டை வட்டாரத்தில் 1,617 கர்ப்பிணி பெண்களும் பயன் பெற உள்ளனர். இதுவரை ஆலத்தூர் மற்றும் வேப்பந்தட்டை வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணி பெண்கள் தாய், சேய் நல சிறப்பு பரிசோதனைகளை செய்து கொள்ள பெரம்பலூரில் உள்ள அரசு தலைமை மருத்துவமனைக்கு தான் செல்ல வேண்டிய சூழ்நிலை இருந்து வந்தது. தற்பொழுது வளமிகு வட்டார வளர்ச்சி திட்டத்தின் மூலமாக முற்றிலும் இலவசமாக 5 சிறப்பு பரிசோதனைகளை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செய்து கொள்ளலாம். இப்பரிசோதனைகளை கர்ப்பிணி பெண்கள் செய்து கொண்டு, மருத்துவர்கள் அறிவுறுத்தலின்படி உணவு, ஊட்டச்சத்து மருந்து,மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டும். இத்திட்டத்தினை கர்ப்பிணி பெண்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார். முன்னதாக ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளை பார்வையிட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார். இந்நிகழ்வின் போது மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநர் மரு.மாரிமுத்து, மாவட்ட சுகாதார அலுவலர் மரு.கீதா, மாவட்ட திட்ட குழு அலுவலர் திருமதி சந்திரா, வட்டார மருத்துவ அலுவலர் மகாலட்சுமி, ஆலத்தூர் வட்டாட்சியர் சத்தியமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சேகர், பிரேமலதா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Similar News