சங்கரன்கோவில் துப்புரவு பணியாளர்கள் நகராட்சி அலுவலகத்தை இன்று முற்றுகை
துப்புரவு பணியாளர்கள் நகராட்சி அலுவலகத்தை இன்று முற்றுகை;
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சியில் 60க்கும் மேற்பட்ட நிரந்தர தூய்மை பணியாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்திலிருந்து நகராட்சி மூலமாக வங்கிக் கடன் பெற்றுள்ளனர். வங்கி கடன் பெற்றதில் இருந்து தூய்மை பணியாளரிடம் இருந்து கடனுக்கான தவணையை மாத மாதம் நகராட்சி நிர்வாகம் பிடித்தம் செய்துள்ளது. பிடித்தம் செய்த தொகையினை நகராட்சி நிர்வாகம் கூட்டுறவு சங்கத்திற்கு செலுத்தாமல் இருந்துள்ளது. கடனுக்கான நிலுவைத் தொகையை கடந்த பல வருடங்களாக செலுத்தாததால் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்திடமிருந்து தூய்மை பணியாளர்களுக்கு ஏழு நாட்களுக்குள் அசலும் வட்டியும் செலுத்த வேண்டும் என அறிவிப்பு கடிதம் வழங்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த தூய்மை பணியாளர்கள் நகராட்சி அலுவலகர்களிடம் விசாரிக்க வந்த போது நகராட்சியில் அதிகாரிகள் யாரும் இல்லாததால் ஆத்திரமடைந்த தூய்மை பணியாளர்கள் நகராட்சி முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். நகராட்சி நிர்வாகமே தூய்மை பணியாளர்களிடம் இருந்து வசூலித்த பணத்தை வங்கிக்கு செலுத்தாமல் முறைகேட்டில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.