உடுமலை அருகே தடுப்பு சுவரில் மோதி கார் விபத்து இருவர் பலி
சாலையோர தடுப்பு சுவரில் கார் மோதியது - ஓட்டல் மேலாளர் உள்பட 2 பேர் பலி பழனியில் சாமி தரிசனம் செய்து விட்டு திரும்பியபோது பரிதாபம்;
உடுமலை அருகே சாலையோர தடுப்பு சுவரில் கார் மோதிய விபத்தில் ஓட்டல் மேலாளர் உள்பட 2 பேர் பலி யானார்கள். பழனியில் சாமி தரிசனம் செய்து விட்டு திரும்பியபோது இந்த பரிதாப சம்பவம் நடந்து விட்டது. இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்தவர் மருதுபாண்டியன் (வயது 35). இவர் கோவையில் உள்ள ஓட் டலில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். இவரது நண்பர் கோவையை சேர்ந்த பிரபாகரன் (39). இந்த நிலையில் பிரபாகரன் தனது குடும்பத்தினருடன் பழனி முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய முடிவு செய்தார். அதன்படி ஒரு காரில் மருதுபாண்டியன், பிரபாகரன், பிரபாகரனின் மனைவி சிலம்பரசி (34), இவர்களது மகன் நேத்ரன் (3) ஆகியோர் ஒரு காரில் கோவையில் இருந்து பழனிக்கு சென்றனர். அங்கு முருகனை தரிசனம் செய்து விட்டு கோவை திரும்பி வந்து கொண்டிருந்தனர். காரை பிரபாகரன் ஓட்டினார். டிரைவரின் இருக்கை அருகே மருதுபாண்டியன் அமர்ந்து இருந்தார். பின் இருக்கையில் சிலம்பரசியும், அவரது மகனும் இருந்தனர். இவர்களது கார் திண்டுக்கல்-பொள்ளாச்சி சாலையில் திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த குறிஞ்சேரி கிராமம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர தடுப்பு சுவரில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் மருதுபாண்டியனும், சிலம்பரசியும் படுகாயம் அடைந்தனர். பிரபாகரனுக்கும் லேசான காயமும் அவரது மகன் நேத்ரனுக்கு காலில் எலும்பு முறிவும் ஏற்பட்டது. காரின் முன் பகுதியும் பலத்த சேதம் அடைந்தது. உடனே அருகில் உள்ள பொதுமக்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே மருது பாண்டியன் இறந்து விட்டார். பிரபாகரன், சிலம்பரசி, நேத்ரன் ஆகியோர் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.ஆனால் அங்கு செல்வதற்குள் சிலம்பரசியும் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து பிரபாகரன், அவரது மகன் நேத்ரன் ஆகிய 2 பேருக்கும் அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து மருதுபாண்டியனின் தந்தை சிவராமன் (57) உடுமலை போலீசில் புகார் செய்தார்.அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்து விட்டு திரும்பியபோது கார் விபத்தில் சிக்கி 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.