திருவையாறு அரசு இசைக்கல்லூரி விடுதி உணவில் பூச்சி, புழு...! மாணவர்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு  

மாணவர்கள் போராட்டம்;

Update: 2025-02-21 12:37 GMT
திருவையாறு அரசு இசைக்கல்லூரி மாணவர்கள் விடுதியில் வழங்கப்படும் உணவில் பூச்சி, புழுக்கள் இருப்பதாகவும், அடிப்டை வசதிகள் செய்து தரக்கோரியும் வெள்ளிக்கிழமையன்று மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில்  அரசு இசைக்கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில், 230 மாணவ, மாணவிகள் பல்வேறு இசை பிரிவுகளில் படித்து வருகின்றனர். இதில், வெளியூர், வெளி மாவட்டங்களில் இருந்து இசை பயிலும் மாணவர்ளுக்கு தனியாக விடுதி வசதி கிடையாது. இந்நிலையில், திருமஞ்சன வீதியில் உள்ள தனியார் மண்டபம், விடுதியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இங்கு100 க்கும் மேற்பட்டோர் தங்கியுள்ளனர். விடுதியில் வழங்கப்படும் உணவில் பீடித்துண்டு, கரப்பான் பூச்சி, புழுக்கள் இருந்துள்ளது. மேலும், கழிப்பறை, மின்விசிறி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக இல்லை என மாணவர்கள் கல்லூரி முதல்வரிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம். இதனால், ஆவேசமடைந்த மாணவர்கள் சுமார் 75 பேர், வெள்ளிக்கிழமை காலை திருவையாறு – திருக்காட்டுப்பள்ளி– கும்பகோணம் சாலையில், புதிய விடுதி கட்டித் தர வேண்டும். தற்போது வழங்கப்படும் உணவை தரமாக வழங்க வேண்டும். அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தர வேண்டும் என வலியுறுத்தி  சாலை மறியலில் ஈடுபட்டனர்.  இது குறித்து  தகவலறிந்த திருவையாறு காவல் துணைக் கண்காணிப்பாளர் அருள்மொழிஅரசு, கல்லூரி முதல்வர் (பொ) ஸ்ரீ வித்யா மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து மாணவர்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Similar News