முதல்வர் மருந்தகங்கள் அமைக்கப்பட்டு வரும் பணிகள் ஆய்வு

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குநர் எம்.லக்ஷ்மி நேரடியாக;

Update: 2025-02-21 16:07 GMT
பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் மாவட்டத்தில் முதல்வர் மருந்தகங்கள் அமைக்கப்பட்டு வரும் பணிகளை பெரம்பலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குநர் திருமதி எம்.லக்ஷ்மி, இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ்,இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்ற நிலை குறித்து பெரம்பலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குநர் எம்.லக்ஷ்மி,மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் முன்னிலையில் இன்று (21.02.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 24.2.2025 அன்று தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவுத்துறையின் மூலம் முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட உள்ள நிலையில் பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட சங்குப்பேட்டை, எளம்பலூர் சாலை, பெரம்பலூர் நகர கூட்டுறவு கடன் சங்கம் உள்ளிட்ட பகுதிகளில் முதல்வர் மருந்தகம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதையும், முதல்வர் மருந்தகங்களுக்கு அனுப்பி வைப்பதற்காக பெரம்பலூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே அமைக்கப்பட்டுள்ள மருந்துகள் சேமிப்பு அறையினையும் கண்காணிப்பு அலுவலர் அவர்களும், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களும் பார்வையிட்டார்கள். முதல்வர் மருந்தகங்களில் எவ்வளவு விலை குறைவாக மருந்துகள் விற்கப்படும் என்பது குறித்தும், எங்கெங்கு இந்த மருந்தகங்கள் அமைக்கப்படுகின்றது என்பது குறித்தும் பொதுமக்களிடையே விளம்பரப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளர் அவர்களுக்கு அறிவுறுத்தினார். கூட்டுறவு சங்கங்களுக்கு ரூ.2 லட்சமும், தனியாருக்கு ரூ.3 லட்சமும் அரசு மானிய நிதி உதவியுடன் முதல்வர் மருந்தகங்கள் அமைக்கப்படுகின்றன. பெரம்பலூர் மாவட்டத்தில் 9 கூட்டுறவு சங்கங்கள் சார்பாகவும், 8 தொழில் முனைவோர்கள் மூலமாகவும் என ஆக மொத்தம் 17 முதல்வர் மருந்தகங்கள் அமைக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது. பின்னர், பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் 2023-24ன் கீழ் ரூ.372.00 லட்சம் மதிப்பீட்டில் 12 பேருந்துகள் நிறுத்தும் வகையிலான பேருந்து நிறுத்தங்களும், 14 கடைகளும், கழிவறை வசதிகளுடன் ஒரு உணவகம் கட்டும் பணிகள் நடைபெறுவதை பார்வையிட்ட பெரம்பலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நகராட்சி ஆணையருக்கு அறிவுறுத்தினார். அதனைத் தொடர்ந்து வாலிகண்டபுரம் ஊராட்சியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பார்வையிட்ட மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள், பொதுமக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை சிகிச்சைகளும் முறையாக வழங்கப்படுகிறதா எனவும், ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதிய மருத்துவ பணியாளர்கள் உள்ளனரா எனவும், அனைத்து பணியாளர்களும் குறித்த நேரத்தில் பணிக்கு வருகிறார்களா என்பது குறித்தும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும், வளமிகு வட்டாரம் வளர்ச்சி திட்டத்தின் கீழ் மாநில திட்டக்குழு பரிந்துரைப்பின்படி பொது சுகாதாரம், நோய் தடுப்பு மருந்துத்துறையின் சார்பில், ஆலத்தூர் மற்றும் வேப்பந்தட்டை வட்டாரங்களில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பதிவு செய்துள்ள கர்ப்பிணி பெண்களுக்கு, அவ்வட்டாரத்திற்குட்பட்ட ஆரம்ப பொது சுகாதார நிலையத்திலேயே தாய் சேய் நல சிறப்பு பரிசோதனைகளான தைராய்டு, சராசரி சர்க்கரை அளவு, ஹெப்பாட்டிட்டீஸ் பி, இருதய பரிசோதனை மற்றும் சிசு குறைபாடு கண்டறியும் பரிசோதனை உள்ளிட்ட 5 வகையான பரிசோதனைகளை மேற்கொள்ளும் சிறப்பு முகாம் பிரதி வாரம் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெற்று வருகின்றது. அதனடிப்படையில் வாலிகண்டபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற சிறப்பு முகாமினை பார்வையிட்டு, கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை கண்காணிப்பு அலுவலர் அவர்களும், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களும் வழங்கினர். மேலும், வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் மற்றும் குரும்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்காக ஒருங்கிணைந்த சேவை மையம் (One Stop Centre) அமைப்பதற்கான இடங்களையும் பார்வையிட்டனர். இந்நிகழ்வுகளில், மாவட்ட வருவாய் அலுவலர் மு.வடிவேல் பிரபு, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சு.தேவநாதன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் பாண்டியன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன், மாவட்ட சுகாதார அலுவலர் மரு.கீதா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.அறிவழகன், செல்வகுமார், பூங்கொடி, வட்டாட்சியர்கள் சரவணன், மாயகிருஷ்ணன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Similar News