டிப்ளமோ பயின்ற மாணவ மாணவிகளுக்கு தமிழ் வழி கல்வி என்ற சான்றிதழ் வழங்க முதல்வருக்கு கோரிக்கை
உலகத் தாய்மொழி தினம், குமாரபாளையம், ராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரியில் கொண்டாடப்பட்டது. டிப்ளமோ பயிலும் மாணவர்களுக்கு தமிழ் வழி கல்வியை அமல்படுத்துமாறு அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.;
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், ராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரியில் உலக தாய்மொழி தினம் கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக, கத்தேரி, அரசு மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றி வரும் தமிழாசிரியை பங்கஜம் பங்கேற்று பேசினார். தாய் மொழியின் மகத்துவத்தையும், கல்வி கற்றல் சமுதாயத்தின் பங்களிப்பு மற்றும் தாய்மொழி மகத்துவத்தை பற்றியும் பேசினார். கல்லூரி முதல்வர் விஜயகுமார் பேசியதாவது: தமிழ்நாட்டில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவ மாணவிகள் இரண்டு மற்றும் மூன்று ஆண்டுகள் டிப்ளமோ பயின்று வருகின்றனர். டிப்ளமோ பயிலும் மாணவ மாணவிகள் 90 சதவீதம் பேர் அரசு பள்ளியில் பயின்ற மாணவ மாணவிகள் ஆவார்கள். அவர்கள் டிப்ளமோ தேர்வு ஆங்கிலம் மற்றும் தமிழ் கலந்த வடிவில் எழுத அரசு அனுமதி வழங்கியுள்ளது. மாணவ மாணவிகள் தேர்வு மற்றும் பாட புத்தகங்கள் ஆங்கிலம் மற்றும் தமிழ் வழியில் வழங்கப்படுகிறது. அது சமயம், முதலாம் ஆண்டு வினாத்தாள் ஆங்கிலம் மற்றும் தமிழிலும் , இரண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு வினாத்தாள் ஆங்கிலத்தில் மட்டும் வழங்கப்படுகிறது. ஆனால் மாணவ மாணவிகள் மூன்று ஆண்டுகளில் நடைபெறும் ஆறு பருவத் தேர்விலும் ஆங்கிலம் மற்றும் தமிழில் தேர்வு எழுதுகின்றனர். பட்டய படிப்பு முடித்த பின்பு, மாணவ மாணவிகளுக்கு ஆங்கில வழிக் கல்வி என்ற சான்றிதழ் வழங்கப்படுகிறது. இதன் மூலம், அரசுப் பள்ளியில் பயின்ற டிப்ளமோ படிக்கும் மாணவ மாணவிகள் அரசு வேலைக்குச் செல்லும் போது ஆங்கில வழிக் கல்வி என்று சான்றிதழ் உள்ளதால், அவர்கள் அரசு வேலை பெறுவதில் முன்னுரிமை இழக்க வேண்டியுள்ளது. டிப்ளமோ பயின்ற மாணவ மாணவிகளுக்கு தமிழ் வழி கல்வி என்ற சான்றிதழ் வழங்கினால், டிப்ளமோ பயின்ற ஏழை எளிய மாணவ மாணவிகள் அரசு வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை வழங்க உறுதுணையாக இருக்கும் என உலக தாய்மொழி தினத்தன்று தமிழக முதல்வரை, உயர்கல்வி அமைச்சரை கேட்டுகொள்கிறோம். இறுதியாக தமிழ் என்ற வடிவத்தில் மாணவ மாணவிகள் நின்று, தமிழ் பற்றை அனைவருக்கும் நினைவு கூறும் வகையில் நிகழ்த்தி காட்டினர்.