களக்காடு புலிகள் காப்பகத்தில் கணக்கெடுப்பு வலியுறுத்தல்

புலிகள் காப்பகத்தில் கணக்கெடுப்பு வலியுறுத்தல்;

Update: 2025-02-23 00:30 GMT
தென்காசி மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் கணக்கெடுப்பு பணியின் போது நடுநிலையாளா்களும் இடம் பெற வேண்டும் என புதிய தமிழம் கட்சியின் நிறுவனா் தலைவா் டாக்டா் க.கிருஷ்ணசாமி வலியுறுத்தினாா். தென்காசியில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தை பொருத்தவரை வனத்துறை தரும் புள்ளிவிவரங்களுக்கும் சமூக ஆா்வலா்கள் தரும் புள்ளிவிவரங்களுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. களக்காடு முண்டந்துறை பகுதியில் எத்தனை புலிகள் இருக்கின்றன என்பதை வனத்துறை இதுவரை தெளிவுபடுத்தவில்லை. அண்மையில் தகவல் உரிமைச் சட்டத்தில் பெறப்பட்ட தகவலின்படி ஐந்து புலிகள் இருப்பதாக சொல்கின்றனா். அதற்கும் முழுமையாக எந்தவித ஆதாரமும் இல்லை. தற்போது பிப். 24 ஆம் தேதிமுதல் களக்காடு முண்டந்துறையில் புலிகள் கணக்கெடுப்பு பணிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வனத்துறை அதிகாரிகள் மட்டுமே இந்த கணக்கெடுப்பு நடத்தினால் உண்மைத் தன்மை வெளிவராது. எனவே இந்தக் கணக்கெடுப்பில் நடுநிலையாளா்களும் பங்கெடுக்க வேண்டும். மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்திலிருந்து துறைசாா்ந்த பேராசிரியா்கள், நடுநிலைமையுடைய சமூக ஆா்வலா்களைக் கொண்டு குழுவை அமைத்து ஆய்வு செய்தால் மட்டுமே புலி இருக்கிறதா? இல்லையா? என்பது தெரியும். இங்கு புலிகள் வாழவில்லை என்று முடிவாகி விட்டாலே மாஞ்சோலை தொழிலாளா்களை வெளியேற்ற வேண்டிய அவசியம் இருக்காது. தென்காசி மாவட்ட மக்கள் கனிம வள கொள்ளையால் ஏதாவது ஒரு வகையில் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனா். எனவே தென்காசி மாவட்டத்திலுள்ளஅனைத்து கட்சிகைள், அனைத்து சமுதாயத் தலைவா்கள், வியாபாரிகள், வழக்குரைஞா்கள், மருத்துவா்கள், சமூக ஆா்வலா்கள் உள்ளிட்ட அனைவரையும் ஒருங்கிணைத்து 20 தினங்களுக்குள் முதல் கட்டமாக கருத்து கேட்பு கூட்டம், ஆலோசனைக் கூட்டம் நடத்த முடிவு செய்துள்ளேன் என்றாா். தெற்கு மாவட்டச் செயலா் கிருஷ்ண பாண்டியன் உடனிருந்தாா்.

Similar News