வையாவூரில் குரங்கு தொல்லை கிராம மக்கள் அவதி
வையாவூர் கிராம பகுதியில் சுற்றித்திரியும் குரங்குகளை, வனத்துறையினர் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்களிடையே கோரிக்கை;
காஞ்சிபுரம் அடுத்த, வையாவூர் கிராமத்தில், வையாவூர் காலனி, தர்மநாயகன்பட்டரை, நல்லுார் உள்ளிட்ட பல துணை கிராமங்களில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்கு, மா, வாழை, தென்னை ஆகிய பயிர்களை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். இதில், வையாவூர் கிராமத்தில், குரங்குகளின் தொல்லை அதிகரித்துள்ளன. அவை, தோட்டப்பயிர்களை நாசம் செய்வதுடன், பொது மக்கள் எடுத்துச்செல்லும் பொருட்களை பறித்து செல்வதால், கிராமத்து மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதவிர, வையாவூர்-ராஜகுளம் செல்லும் சாலையில், குரங்குகள் தாந்தோன்றி தனமாக சுற்றித்திரிவதால், வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்துடன் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே, வையாவூர் கிராம பகுதியில் சுற்றித்திரியும் குரங்குகளை, வனத்துறையினர் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.