வட்டமலை அணையில் இருந்து பாசன நீர் திறக்கப்பட்டது.
வெள்ளகோவில் உத்தமபாளையம் வட்டமலை அணையில் இருந்து பாசன நீர் திறக்கப்பட்டது.;
தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டு அணையில் இருந்து பாசன நீரை திறந்து வைத்தார். நிகழ்ச்சிக்கு தாராபுரம் சப்-கலெக்டர் பெலிக்ஸ் ராஜா தலைமை தாங்கினார். பிரகாஷ் எம்.பி. முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:- வட்டமலை கரை ஓடை நீர் தேக்கத்தின் 6043 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும் வகையில் மார்ச் மாதம் 6-ந் தேதி வரை இடது மற்றும் வலது கால்வாய் வழியாக கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. வெள்ளகோவில், உத்தமபாளையம், லக்மநாயக்கன்பட்டி, முளையாம் பூண்டி, புதுப்பை ஆகிய வருவாய் கிராமங்களில் விவசாய பயிர்களை காப்பாற்றும் பொருட்டும், பொதுமக்கள் மற்றும் கால்நடைகளின் குடிநீர் தேவைகளுக்காகவும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன கசிவு நீரை நம்பி இந்த நீர் தேக்கம் கட்டப்பட்டது. மழை குறைந்து, கசிவு நீரும் குறைந்த காரணத்தினால் போதிய நீர் வரத்து இல்லை. அருகில் உள்ள அமராவதி ஆற்றிலிருந்து உபரி நீரை நீரேற்று நிலையம் மூலம் குழாய் வழியாக வட்டமலை அணைக்கு கொண்டுவர திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டல தலைவர் இல.பத்மநாபன், வெள்ளகோவில் நகர மன்ற தலைவர் கனியரசி முத்துக்குமார், ஒன்றிய செயலாளர் கே.சந்திரசேகரன், திருப்பூர் தெற்கு மாவட்ட துணை செயலாளர் ராசி கே.ஆர்.முத்துக்குமார், நகர செயலாளர் சபரி எஸ்.முருகானந்தன், நீர்வளத்துறை வட்டமலை கரை ஓடை நீர் தேக்க பொறியாளர் ரா.சுப்பிரமணியன், உதவி செயற்பொறியாளர் நாட்ராயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.