போக்குவரத்து பாதிப்பு
பண்ணாரி சோதனை சாவடி அருகே வாகனங்களை வழிமறித்து சாலையில் நின்ற யானையால் பரபரப்பு போக்குவரத்து பாதிப்பு;
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, சிறுத்தை, புலி, கரடி, காட்டெருமை போன்ற ஏராளமான வனவிலங்கு வசித்து வருகின்றன.யானைகள் அவ்வபோது உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப் பகுதியை விட்டு வெளியேறி சாலையில் உலா வருவதும், வாகனங்களில் உணவு ஏதாவது உள்ளதா என வழிமறைத்து உணவை தேடுவதும் தொடர்கதை ஆகி வருகிறது.இந்நிலையில் நேற்று இரவு பண்ணாரி சோதனை சாவடி அருகே வனப்பகுதியை விட்டு வெளியேறிய காட்டு யானை ஒன்று சத்தி - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்து நின்று கொண்டிருந்தது. இதனால் அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை சிறு தொலைவில் நிறுத்தினர். சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக அந்த ஒற்றை யானை சாலையில் குறுக்கே அங்கும், இங்கும் சுற்றி கொண்டிருந்தது. இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் யானை மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றதால் போக்குவரத்து சீரானது. இதேபோல் நேற்று மாலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று ஆசனூர் மலைப்பாதையில் உள்ள சாலையில் உலா வந்தது. அந்த வழியாக வந்த வாகனங்களை வழிமறித்து நின்றது. இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் சிறிது நேரத்தில் மீண்டும் யானை வனப்பகுதிக்குள் சென்றதால் போக்குவரத்து சீரானது. இது குறித்து வனத்துறையினர் கூறும் போது,யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி உணவு தண்ணீருக்காக சாலையை கடந்து செல்வது வழக்கமான ஒன்று. எனவே வாகன ஓட்டிகள் மெதுவாகவும், எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என அறிவுறுத்தினர்.எக்காரணம் கொண்டு வனச்சாலையில் வாகனங்களை நிறுத்தக்கூடாது என்றனர்.