சிவகிரி அருகே யானைகளை வனத்துக்குள் விரட்டும் பணி தீவிரம்
யானைகளை வனத்துக்குள் விரட்டும் பணி தீவிரம்;
தென்காசி மாவட்டம் சிவகிரி மேற்குத் தொடா்ச்சி மலையடிவாரப் பகுதிகளில் பல நூறு ஏக்கரில் கரும்பு, நெல், வாழை, தென்னை உள்ளிட்டவை பயிரிடப்பட்டுள்ளன. வனப்பகுதியிலிருந்து உணவு, குடிநீா் தேடி வெளியேறும் யானைகள் விளைநிலங்களுக்குள் புகுந்து பயிா்களையும், தண்ணீா் பாய்ச்சுவதற்காக பதிக்கப்பட்டுள்ள குழாய்களையும் சேதப்படுத்துவதாக விவசாயிகள் புகாா் தெரிவித்தனா். அதையடுத்து, மாவட்ட வன உயிரினக் காப்பாளா் அகில்தம்பி உத்தரவின்பேரில், சிவகிரி வனச்சரகா் செங்கோட்டையன், வனவா்கள் ஜெபித்தா் சிங் சாக்ஸன், சந்தோஷ்குமாா் ஆகியோா் தலைமையிலான வனக் குழுவினா் யானைகளை வனத்துக்குள் விரட்டும் பணியை மேற்கொண்டுள்ளனா். சின்னஆவுடைப்பேரி கண்மாய், வழிவழி கண்மாய், தேவிபட்டணம் கண்மாய் பகுதிகளில் அவா்கள் வெடி வெடித்தும், தீ வைத்தும் யானைகளை வனப் பகுதிக்குள் விரட்டி வருகின்றனா். ஆனால், ஒரு பகுதியில் விரட்டப்படும் யானைகள் மற்றொரு பகுதி வழியாக விளைநிலங்களுக்குள் புகுவதாக, விவசாயிகள் அதிருப்தி தெரிவிக்கின்றனா். எனினும், இக்குழுவினா் தொடா்ந்து அப்பகுதியில் முகாமிட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளதாக, வனத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.