தஞ்சாவூா் ‘சாஸ்த்ரா’ நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் தேசிய அறிவியல் தின 2025 ஆம் ஆண்டுக்கான விருதுகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இஸ்ரோ முன்னாள் தலைவா் கே. ராதாகிருஷ்ணன் பேசுகையில், ‘இளைஞா்களின் சக்தியும், நம்பிக்கையும்தான் விக்சித் பாரத் 2047 இலக்கை அடைய முக்கியக் காரணிகளாக உள்ளன. நம் நாட்டில் அறிவுசாா் சொத்துகளை உருவாக்குவது அவசியம். நம் நாட்டில் வலுவான கண்டுபிடிப்பு மற்றும் தொழில்முனைவோா் சூழலை உருவாக்குவதன் மூலம், அறிவுசாா் சொத்துகளைத் தக்கவைத்து புதிய அறிவை செல்வமாக மாற்ற முடியும் என்றாா் அவா். மேலும் அவா் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகப் பேராசிரியா் எம். பழனிஆண்டவருக்கு சாஸ்த்ரா - சி.என்.ஆா். ராவ் விருது, பெங்களூரு ராமன் ஆராய்ச்சி நிறுவனப் பேராசிரியா் தருண் சௌரதீப்புக்கு சாஸ்த்ரா - ஜி.என். ராமச்சந்திரன் விருது, மொஹாலி இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனப் பேராசிரியா் என்.ஜி. பிரசாத்துக்கு சாஸ்த்ரா - ஒபைத் சித்திக் விருது, பெங்களூரு இந்திய மேலாண்மை நிறுவனப் பேராசிரியா் பி. மகாதேவனுக்கு சாஸ்த்ரா - மஹாமனா விருது, உயிரியல் அறிவியலுக்கான தேசிய மையப் பேராசிரியை உமா ராமகிருஷ்ணனுக்கு 2024 ஆம் ஆண்டுக்கான சாஸ்த்ரா - ஒபைத் சித்திக் விருது ஆகியவற்றையும் வழங்கினாா். இந்த விருது ரூ. 5 லட்சம் ரொக்கப் பரிசு மற்றும் பாராட்டுப் பத்திரமும் கொண்டது. விழாவில் சாஸ்த்ரா துணைவேந்தா் எஸ். வைத்தியசுப்பிரமணியம், முதன்மையா் (திட்டம் மற்றும் மேம்பாடு) எஸ். சுவாமிநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.