மின்விளக்கு வசதி இல்லை இருளில் தரிசனம் செய்த பக்தர்கள்
பிறவாஸ்தானேஸ்வரர் பழுதடைந்த மின்விளக்குகளை சீரமைக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்;
காஞ்சிபுரம் ஜவஹர்லால் நேரு சாலை, பொன்னேரிக்கரை புதிய ரயில் நிலையத்திற்கு செல்லும் சாலையில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட பிறவாஸ்தானேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் தொல்லியல் துறை பராமரிப்பில் இருந்து வருகிறது. மகா சிவராத்திரியான நேற்று முன்தினம் இரவு முழுதும், இக்கோவிலில் சுவாமி தரிசனம் ஆயிரகணக்கான பக்தர்கள் வந்து சென்றனர். ஆனால், கோவில் வளாகத்தில் போதுமான வெளிச்சம் தரும் வகையில் மின்விளக்கு வசதி ஏற்படுத்தப்படவில்லை. கோவிலின் பின்புறம் உள்ள மின்விளக்குகள் பழுதடைந்து இருந்ததால், அப்பகுதி இருள்சூழ்ந்து காணப்பட்டது. இதனால், கோவிலுக்கு வந்த பக்தர்கள் கோவிலை சுற்றிவர சிரமப்பட்டனர். குறிப்பாக கண்பார்வை குறைபாடு உள்ளவர்கள், முதியோர், இருளில் கோவிலை சுற்றி வர பிறர் உதவியை நாட வேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே, பிறவாஸ்தானேஸ்வரர் பழுதடைந்த மின்விளக்குகளை சீரமைக்க தொல்லியல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.