சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பாதையில் 60 அடி பாலம் உள்ளது. இதன் அருகே 20 அடி பள்ளத்தில் ஒரு பெண் பிணம் அழுகிய நிலையில் கிடப்பதாக நேற்று முன்தினம் அந்த வழியாக சென்றவர்கள் ஏற்காடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அங்கு சென்று அந்த பெண் பிணத்தை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போனவர்கள் பற்றி விசாரித்தனர். மேலும் அந்த பிணத்தின் அருகே கிடந்த ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களின் மூலம், சேலம் புதிய பஸ் நிலையம் அருகே தனியார் பெண்கள் விடுதியில் தங்கி இருந்த திருச்சி மாவட்டம் துறையூர் விநாயகர் கோவில் பகுதியை சேர்ந்த மாரிமுத்து என்பவருடைய மகள் லோகநாயகி என்ற அல்பியா (வயது 35) என தெரியவந்தது. அவர் காணாமல் போய் உள்ளதாக அந்த விடுதி காப்பாளர் சேலம் பள்ளப்பட்டி போலீசில் புகார் செய்துள்ளதும் தெரியவந்தது. அப்போது கடைசியாக அவரை தொடர்பு கொண்டது பெரம்பலூர் அருணாச்சல கவுண்டர் நகர் வடக்கு மாதவி ரோட்டை சேர்ந்த அமானுல்லா என்பவருடைய மகன் அப்துல் ஹபீஸ் (22) என்பதும், அவர் பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 4-ம் ஆண்டு பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வருவதும் தெரிந்தது. உடனடியாக அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறியதாவது இன்ஸ்டாகிராம் காதலி தாவிய சுல்தானா, ஏற்கனவே காதலித்த மருத்துவ மாணவி மோனிஷா ஆகியோரை கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்துல் ஹபீஸ் சந்தித்து உள்ளார். அப்போது அவர்களிடம் தனது உறவினர் பெண்ணின் அண்ணனை லோகநாயகி திருமணம் செய்து கொண்டார். அவரை பாட்டிலால் அடித்து கொன்று விட்டாள் என்ற பொய்யான கதையை கூறி, இதற்கு பழி வாங்குவதற்காக உதவி செய்ய வேண்டும் என்று அவர்களை மூளை சலவை செய்து உள்ளார். பின்னர் டாக்டருக்கு படிப்பதால், மோனிஷாவை மயக்க மருந்துடன், ஊசியை எடுத்து வரச்சொல்லி உள்ளார். அதன்படி கடந்த 1-ந்தேதி 3 பேரும் சேலத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்து உள்ளனர். பின்னர் டிரைவர் இல்லாமல் ஒரு வாடகை காரை எடுத்துக்கொண்டனர். காரை அப்துல்ஹபீஸ் ஓட்டி உள்ளார். லோகநாயகியை தொடர்பு கொண்டு தங்கும் விடுதியில் இருந்து வரவழைத்து காரில் ஏற்றிக்கொண்டு ஏற்காட்டுக்கு அவர்கள் புறப்பட்டு சென்றனர். வழியில் ஏற்காடு மலைப்பாதையில் 60 அடி பாலம் அருகே காதலிகளுடன் அவர் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்துள்ளார். லோகநாயகியின் காயங்கள் உடனடியாக ஆறுவதற்காக மருந்து செலுத்துவதாக கூறி மோனிஷா அதிக வீரியம் கொண்ட மயக்க மருந்தை லோகநாயகிக்கு செலுத்தியதாக கூறப்படுகிறது. அதிக வீரியம் கொண்ட மயக்க மருந்து என்பதால் ஆக்சிஜன் உதவி இல்லாமல் அவரால் வெகுநேரம் உயிருடன் இருக்க முடியாது என்பது மோனிஷாவுக்கு நன்கு தெரியும் என்பதால், அவர்கள் தீட்டிய திட்டத்தின் படி லோகநாயகி மயங்கி விழுந்தார். பின்பு அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட லோகநாயகியை மலைப்பாதையில் தள்ளிவிட்டு விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்று உள்ளனர். இவ்வாறு போலீசாரிடம் அளித்த பரபரப்பு வாக்குமூலத்தில் அப்துல் ஹபீஸ் கூறி உள்ளார். இதையடுத்து அப்துல் ஹபீஸ், அவரது காதலிகள் மருத்துவ மாணவி மோனிஷா, தாவிய சுல்தானா ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.