நகை திருட்டு

கவுந்தப்பாடியில் பரபரப்பு சம்பவம் தங்க நகை என நினைத்து கவரிங் நகையை பறித்து சென்ற வாலிபர் மூதாட்டியிடம் முகவரி கேட்பது போல் நடித்து துணிகரம்;

Update: 2025-03-06 07:11 GMT
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி, காஞ்சிகோவில் ரோடு, கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சரஸ்வதி (64). இவருக்கு சொந்தமான பழைய வீடு கிருஷ்ணாபுரம் ஈரோடு ரோடு, காமாட்சி அம்மன் கோவில் அருகே உள்ளது. அங்கு மூன்று சென்ட் இடத்தில் சரஸ்வதி பல்வேறு வகையான பூச்செடிகளை பராமரித்து வளர்த்து வருகிறார். தினமும் மாலை பூச்செடிகளுக்கு சரஸ்வதி தண்ணீர் பாய்ச்சுவது வழக்கம். நேற்று மாலையும் வழக்கம்போல் சரஸ்வதி பூச்செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சு கொண்டிருந்தார். அப்போது அங்கு ஒரு மோட்டார் சைக்கிளில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் வந்தார். அவர் சரஸ்வதி வீட்டில் அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு சரஸ்வதியிடம் முகவரி கேட்பது போல் அவர் அருகே வந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென இந்த வாலிபர் சரஸ்வதி கழுத்தில் அணிந்திருந்த நகையை பறித்துக் கொண்டு தப்பி ஓடினார். இதனால் அதிர்ச்சி அடைந்த சரஸ்வதி திருடன்.. திருடன் என கத்தினார். அவரது சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து அந்த வாலிபரை பிடிக்க முயன்றனர். ஆனால் அதற்குள் அந்த வாலிபர் தான் வந்த மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். பின்னர் நடந்த சம்பவம் குறித்து சரஸ்வதி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அப்போதுதான் அவரிடமிருந்து பறிக்கப்பட்டது தங்கச் நகை இல்லை கவரிங் நகை என தெரிய வந்தது. எனினும் திருட்டுப் போனால் தனது கவரிங் நகையை மீட்டு தரக்கோரி அவர் போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News