சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை மிரட்டல் விடுத்த தந்தை மகன் போக்சோவில் கைது
ஜெயங்கொண்டம் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை மிரட்டல் விடுத்த தந்தை மகன் இருவரையும் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.;
அரியலூர், மார்ச் 6- அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள ஓலையூர் கிராமத்தைச் சேர்ந்த சிவகுருநாதன் என்பவரது மகன் பிரவீன்குமார் (30) கூலி தொழிலாளியான இவர் அதே பகுதியில் பத்தாம் வகுப்பு பயிலும் 15 வயது சிறுமியை கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும் மேலும் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அடிக்கடி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.இதனை பார்த்த அவரது பெற்றோர்கள் பிரவீன்குமாரை கண்டித்துள்ளனர். அப்போது சிறுமியையும் சிறுமியின் குடும்பத்தினரையும் கொலை செய்து விடுவதாக பிரவீன்குமார் மற்றும் அவரது தந்தை சிவகுருநாதன் ஆகியோர் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.இதுகுறித்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சிறுமியின் தாயார் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி. பிரவீன்குமார் மற்றும் அவரது தந்தை சிவகுருநாதன் ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிந்து இருவரையும் போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.