பொங்கல் விழா

சத்தியமங்கலம் அருகே அடர்ந்த வனப்பகுதியில் உள்ள ஆதி கருவண்ணராயர் கோவில் மாசிமக பொங்கல் விழா 21 கட்டுப்பாடுகள் விதிப்பு;

Update: 2025-03-08 03:43 GMT
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனக்கோட்டம் கெஜஹட்டி என்ற அடர்ந்த வனப்பகுதியில் ஆதி கருவண்ணராயர் பொம்ம தேவர் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இங்கு வரும் இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசி மகம் பொங்கல் விழா மார்ச் மாதம் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு மட்டுமன்றி கேரளா கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். அடர்ந்த வனப் பகுதியில் கோவில் உள்ளதால் வனவிலங்குகளுக்கு எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படாத வகையில் வனத்துறையினர் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். இந்த ஆண்டுக்கான மாசிமகம் பொங்கல் விழா வருகிற மார்ச் மாதம் 11, 12, மற்றும் 13-ந் ஆகிய 3 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த விழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு 21 கட்டுப்பாடுகளை வனத்துறையினர் விதித்துள்ளனர். அதன்படி திருவிழா நடைபெறும் 3 நாட்களிலும் முதலில் வரும் 100 வாகனங்களுக்கு மட்டுமே காராச்சி கொரை வன சோதனை சாவடியினை கடந்து செல்ல அனுமதிக்கப்படும். மேற்படி அனுமதிக்கப்பட்ட நூறு வாகனங்கள் போக கூடுதலான வாகனங்களை நிறுத்தி வைப்பதற்கு பவானிசாகர் அணை பூங்கா மற்றும் சின்ன பண்ணாரி கோவில் வளாகம் ஆகிய இரண்டு இடங்களில் காவல்துறையினரால் ஏற்பாடுகள் செய்து தரப்படும். தேவைக்கேற்ப கூடுதல் இடங்களில் வாகன நிற்கும் இடம் ஏற்பாடு செய்து தரப்படும்.தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் மூலமாக பஸ் வசதிகள் செய்து தரப்படும். அதற்கேற்ப கூடுதல் பஸ்கள் இலவசமாக இயக்கப்படும். வனத்துறை மூலம் இப்பணி ஒருங்கிணைப்பு செய்யப்படும். ஒரு நாளைக்கு அதிகபட்சம் 100 வாகனங்கள் மட்டுமே சோதனை சாவடியில் சோதனை செய்து உறுதி செய்யும் வகையில் சோதனை சாவடியில் பரிந்துரைக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்த பிறகு வாகனங்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட வேண்டும். பக்தர்கள் போதை தரும் பொருட்களை எதையும் தங்களுடன் எடுத்துச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வனம் மற்றும் வனவிலங்குகளுக்கு பாதிப்புகள் ஏற்படாத வண்ணம் திருவிழா நடத்தப்பட வேண்டும். அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே வாகனங்களையும் நிறுத்த வேண்டும். எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் மற்றும் பாலித்தீன் பிளாஸ்டிக் பொருட்களை வனப்பகுதிக்குள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு முன்னெச்சரிக்கைக்காக மோயார் ஆறு மற்றும் அதன் அருகே உள்ள பகுதிகளுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 108 ஆம்புலன்ஸ் சேவை மருத்துவ வசதி குடிநீர் வசதி மின்சார வசதி ஆகியவை இந்து சமய அறநிலைத்துறையினரால் வழங்கப்பட உள்ளது. பக்தர்கள் தங்கள் குடும்பத்தினர் அல்லாமல் அணியர்களை அழைத்து வரக்கூடாது. திருவிழா நடைபெறும் இரவு மட்டும் கோவில் வளாகத்தில் பக்தர்கள் தங்க அனுமதிக்கப்படுவார்கள் அதாவது கோவில் நிர்வாகிகள் மட்டுமே கோவில் வளாகத்தில் தங்க அனுமதிக்கப்படுவார்கள். ஆடு பலியிடுவதற்காக ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதி தோராயமாக 20 x 20 அடி கோவில் வளாகத்தில் ஒதுக்கீடு செய்யப்படும். ஒதுக்கப்பட்ட பகுதியில் மட்டுமே ஆட்டை பலியிட்டு சுத்தம் செய்ய வேண்டும். பலியிடப்பட்ட ஆட்டின் ரத்தத்தை குழிக்குள் புதைத்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவிழாவை முன்னிட்டு பெண் பக்தர்களை சோதனை செய்ய மகளிர் காவலர்கள் மற்றும் மகளிர் வனத்துறை ஊழியர்கள் நியமிக்கப்பட வேண்டும் உள்பட 21 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

Similar News