தினந்தோறும் கொண்டாடப்பட வேண்டியவர்கள் பெண்கள் மகளிர் தின விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு
தினந்தோறும் கொண்டாடப்பட வேண்டியவர்கள் பெண்கள் மகளிர் தின விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு;
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு KSR மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தமிழ்நாடு முன் பருவக் கல்வி ஆசிரியர்கள் சங்கம் மற்றும் கல்வியாளர்கள் சங்கமம் இணைந்து நடத்திய உலக மகளிர் தின விழா மற்றும் ஆசிரியர் விருது வழங்கும் விழா திருச்செங்கோடு KSR கூட்ட அரங்கில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு கல்விக் குழுமங்களின் துணைத் தாளாளர் சச்சின் தலைமை வகித்தார். நிர்வாக இயக்குனர் மோகன், முதன்மை திட்ட அலுவலர் பாலுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இவ்விழாவின் சிறப்பு அழைப்பாளராக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் மகளிர் தினம் என்பது ஒரு நாளில் மட்டும் கொண்டாடப்பட வேண்டிய தினம் அல்ல, அவர்கள் ஒவ்வொரு நாளும் கொண்டாடப்பட வேண்டியவர்கள். ஒரு ஆண் கல்வி கற்றால் அவரது வீடு நன்றாக இருக்கும், அதுவே ஒரு பெண் கல்வி கற்றால் அந்த சமுதாயமே நன்றாக இருக்கும் எனப் பேசினார். மகளிருக்கு கட்டணமில்லா பயணவசதி, மகளிர் உரிமைத் தொகை, மாணவியருக்கு புதுமைப்பெண் திட்டம், பணிபுரியும் மகளிருக்கு 12 மாதம் மகப்பேறு விடுப்பு, அரசுப் பணிகளில் 40% இட ஒதுக்கீடு, சொத்தில் சம உரிமை, உள்ளாட்சியில் 50% ஒதுக்கீடு என பெண்களின் கல்வி மேம்பாட்டிலும் சமூக மேம்பாட்டிலும் பெரும்பங்கு வகித்தது திராவிட மாடல் ஆட்சி எனக் குறிபிட்டு மகளிர் தின சிறப்புரையாற்றினார். இந்நிகழ்விற்கு தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களிலிருந்து 399 விண்ணப்பங்கள் பெறப்பட்டு அவற்றில் சிறந்த 16 விண்ணப்பங்கள் வல்லுனர் குழுவால் தேர்வு செய்யப்பட்டு விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. அவ்வாறு தேர்வு செய்யப்பட்ட 16 சிறந்த ஆசிரியர்களுக்கு மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களால் விருது மற்றும் ரொக்கப் பரிசு பத்தாயிரம் வழங்கப்பட்டது. தொடர்ந்து நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி நம்மால் முடியும் என்ற தலைப்பிலும், ஆசிரியர் மனசுத்திட்ட ஒருங்கிணைப்பாளர் சிகரம் சதீஷ் குமார் உங்களிடம் இருந்து தொடங்குங்கள்" என்றதலைப்பிலும்கருத்துரையாற்றினார்கள். முன்னதாக நிகழ்விற்கு வந்தவர்களை கல்லூரி முதல்வர் கார்த்திகேயன் வரவேற்றார். விழாவின் முடிவில் கல்லூரி துணை முதல்வர் மகாலட்சுமி நன்றியுரையாற்றினார். விழாவில் முன் பருவக் கல்வி ஆசிரியர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.