திருவானைக்காவல் கோயிலில் பங்குனி பிரம்மோற்சவ விழா கொடியேற்றம்!

விழாவின் முக்கிய நிகழ்வான பங்குனித் தேரோட்டம், வரும் 30-ம் தேதி நடைபெறுகிறது;

Update: 2025-03-08 11:35 GMT
பஞ்சபூதங்களில் நீர் தலமாக விளங்குவது திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயில். இங்கு ஆண்டுதோறும் பங்குனி மண்டல பிரம்மோற்சவம் 48 நாட்கள் கொண்டாடப்படும். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான விழா‌ இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பிரம்மோற்சவத்தையொட்டி முன்னதாக சுவாமி, அம்மன், விநாயகர், சோமஸ்கந்தர், பிரியாவிடை ஆகிய பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் காலை 8.30 மணிக்குக் கோயில் வளாகத்தில் உள்ள கொடிமரம் அருகே வந்தனர். அங்கு, கொடிமரத்திற்குச் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. பின்னர் காலை 9.25 மணிக்குள் பெரிய கொடி ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து வரும் 25ம் தேதி, எட்டுத்திக்கு கொடியேற்றம் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து வரும் 29ம் தேதி தெருவடைச்சான் எனப்படும் சப்பர ஊர்வலம் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான பங்குனித் தேரோட்டம், வரும் 30-ம் தேதி காலை 7.09 மணிக்கு மேல் 7.20 மணிக்குள் தேர் வடம் பிடிக்கப்படுகிறது. விழாவின் நிறைவாக, சிவன், அம்மன் ஆகவும், அம்மன், சிவன் ஆகவும் வேடமிட்டு, ஐந்தாம் பிரகாரத்தில் வலம் வரும், பஞ்சப் பிரகாரம் மார்ச் 14-ம் தேதி நடைபெறுகிறது. உலகத்திலேயே இந்தக் காட்சியானது இந்த திருக்கோயில் மட்டுமே காணக்கிடைக்கும் அற்புதக் காட்சியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது

Similar News