சேலம் நெத்திமேட்டில் பழைய பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து
போலீசார் விசாரணை;
சேலம் நெத்திமேடு கே.பி.கரடு காமராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர் சுந்தரம். இவரது மனைவி கவுசல்யா. இவர்கள் அந்த பகுதியில் பழைய பிளாஸ்டிக், சாக்கு குடோன் வைத்து நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல வேலை முடிந்து பணியாளர்கள் குடோனை மூடிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டனர். அப்போது நள்ளிரவு குடோனில் திடீரென தீப்பிடித்து மளமளவென எரிந்தது. இதை கண்டு பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் குடோன் உரிமையாளர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் அங்கு வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருந்த போதிலும் அங்கிருந்த பிளாஸ்டிக், சாக்கு, தட்டுமுட்டு சாமான்கள் உள்ளிட்டவை தீயில் எரிந்து சேதமானது. இவற்றின் மதிப்பு லட்சக்கணக்கில் இருக்கும் என்று கூறப்படுகிறது.