கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி
சேலம் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் பீர் விற்பனை இருமடங்காக உயர்வு;
தமிழகத்தில் சுமார் 4 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் தினமும் ரூ.100 கோடி முதல் ரூ.120 கோடி அளவுக்கு மதுபானங்கள் விற்பனை நடைபெறுகிறது. இதுதவிர, ஆங்கில புத்தாண்டு, தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகளை நாட்களில் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை அதிகரிக்கும். அதேசமயம், கோடை காலமான மார்ச், ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் டாஸ்மாக் கடைகளில் பீர் விற்பனை அதிகமாக நடைபெறும். இதனால் தற்போது கோடை வெயிலின் தாக்கம் காரணமாக டாஸ்மாக் கடைகளில் பீர் விற்பனை அதிகரித்துள்ளது. சேலம் மாவட்டத்தை பொறுத்தவரையில் 220 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் தினமும் ரூ.5 கோடி வரை மதுபானங்கள் விற்பனை நடைபெறும். ஆனால் தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் டாஸ்மாக் கடைகளில் பிராந்தி, ரம், விஸ்கி போன்ற மதுபானங்கள் விற்பனை சரிந்து பீர் விற்பனை அதிகமாக நடைபெற்று வருகிறது. மேலும், சில கடைகளில் கூலிங் பீர் தட்டுப்பாடு நிலவுவதாகவும் மதுபிரியர்கள் புலம்பி வருகின்றனர். இதுகுறித்து டாஸ்மாக் ஊழியர்கள் கூறியதாவது:- சேலம் மாவட்டத்தில் ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். இதனால் அந்த காலக்கட்டத்தில் மற்ற வகை மதுபானங்களை விட பீர் விற்பனை அதிகரிக்கும். தற்போது வெயிலின் தாக்கம் காரணமாக டாஸ்மாக் கடைகளுக்கு வரும் மதுபிரியர்கள் பீர் வகைகளை தான் விரும்பி வாங்கி செல்கிறார்கள். இதனால் அதன் விற்பனை இருமடங்காக அதிகரித்துள்ளது. அதேசமயம், பிராந்தி, ரம், விஸ்கி உள்ளிட்ட மதுபானங்களின் விற்பனை குறைந்துள்ளது. எனவே, பீர் விற்பனை அதிகரித்துள்ளதால் அதற்கு ஏற்றவாறு கூடுதல் பீர் பாட்டில்கள் விற்பனைக்கு அனுப்புமாறு அதிகாரிகளை கேட்டுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.