சேலம் அருகே நகைக்கடை ஊழியரை தாக்கி நகை மற்றும் செல்போன் பறிப்பு

2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2025-03-11 03:39 GMT
சேலம் அருகே உள்ள வீராணம் பள்ளிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பூபதி (வயது 37). இவர் சேலம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள நகைக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். பூபதி இரவு வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இவர் வீராணம் பஸ் நிறுத்தம் அருகே சென்ற போது ஒரு கும்பல் அவரை வழிமறித்தது. பின்னர் அந்த கும்பல் பூபதியை கட்டை மற்றும் கைகளால் தாக்கியது. அவர் அணிந்திருந்த 2½ பவுன் நகை, செல்போன் ஆகியவற்றை பறித்துவிட்டு அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. இதுகுறித்து வீராணம் போலீஸ் நிலையத்தில் பூபதி புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கீதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். இதில் பூபதியை தாக்கியது வீராணம் பகுதியை சேர்ந்த சக்திவேல் (23), ராமு (24) உள்பட 9 பேர் என்பது தெரியவந்தது. இதையடுத்து சக்திவேல், ராமு ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மற்ற 7 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Similar News