பயணிகள் எதிர்பார்ப்பு

சுட்டெரிக்கும் வெயில்ஈரோட்டில் குளிர்சாதன பஸ்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் பயணிகள் எதிர்பார்ப்பு;

Update: 2025-03-12 05:20 GMT
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது. சர்வ சாதாரணமாக 101 டிகிரி வரை வெயில் பதிவாகி வருகிறது. பிப்ரவரி மாதம் மத்தியில் இருந்தே வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் சென்ற ஆண்டு கோடை காலத்தை போலவே நடப்பாண்டும் இந்திய அளவில் வெயில் உச்சநிலையை அடையும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்து வருகின்றனர். சாதாரண இயல்பை விட 2 முதல் 4 டிகிரி வரை வெயில் கூடுதலாக வாட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வெயிலின் தாக்கம் நீடிக்கிறது. குறிப்பாக காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெயிலின் தாக்கம் உச்சத்தில் உள்ளது. இந்த இடைப்பட்ட நேரத்தில் அனல் காற்று வீசுவதால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை வீட்டில் புழுக்கத்துடன் அவதி அடைந்து வருகின்றனர். இதைப்போல் வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இதனால் ஈரோடு மாநகர் பகுதியில் மதிய நேரங்களில் பெரும்பாலான பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். ஈரோடு மாவட்டம் வளர்ந்து வரும் தொழில் நகரமாக உள்ளது. இங்கு வெளி மாவட்டங்களில் இருந்து நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் வருகின்றனர். இதேபோல் இங்கிருந்தும் வெளிமாவட்டங்களுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் செல்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் பஸ் பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். ஈரோடு மத்திய பஸ் நிலையத்திலிருந்து திருப்பூர், கோவை, மைசூர், சேலம், கரூர் போன்ற ஊர்களுக்கும் திருநெல்வேலி, நாகர்கோவில், மதுரை, சென்னை போன்ற தொலைதூர பயணங்களுக்கும் பொதுமக்கள் பஸ்களை பயன்படுத்தி வருகின்றனர். தற்போது வெயிலின் தாக்கம் காரணமாக பஸ்களில் பயணம் செய்வது பொதுமக்களுக்கு சிரமமாக இருந்து வருகிறது. அனல் காற்றுடன் வெயில் வாட்டி வதைப்பதால் பஸ் பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர். இந்நிலையில் ஈரோட்டில் இருந்து கோவை, சேலம், மதுரை, திருநெல்வேலி, திருச்செந்தூர் என பல்வேறு ஊர்களுக்கும் ஏ.சி (குளிர்சாதன ) பஸ்கள் விடப்பட்டுள்ளன. ஆனால் இவை குறைந்த அளவிலேயே விடப்படுவதாக கூறப்படுகிறது. தற்போது கடும் வெயில் வாட்டி வதைத்து வருவதால் பெரும்பாலான பயணிகள் சற்று கட்டணம் அதிகமாக இருந்தாலும் குளிர்சாதன பஸ்களில் இடம் பிடிக்க மோதுகின்றனர். குறிப்பாக ஈரோட்டில் இருந்து கோவை செல்லும் இடைநில்லா பஸ்களுக்கு ரூ.95 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. குளிர் சாதன பஸ்களுக்கு ரூ.115 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதைப்போல் ஈரோட்டில் இருந்து சேலத்திற்கு ரூ.45 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. குளிர்சாதன பஸ்களுக்கு ரூ.65 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.ஆனாலும் பொதுமக்கள் பகல் நேரங்களில் அனல் காற்று வீசும் பயணத்தை தவிர்க்கும் வகையில் அதிக அளவில் குளிர்சாதன பஸ்களை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இந்நிலையில் ஈரோட்டில் இருந்து கோவை வழித்தடத்தில் சுமார் 1.30 மணி நேரத்திற்கு ஒரு குளிர்சாதன பஸ் என 8 முறை செல்கிறது. குறிப்பாக வெயில் உச்சநிலையை அடையும் 2 மணி முதல் 5 மணி வரை குளிர் சாதன பஸ் வசதி இல்லை.இதேபோல் கோவையிலிருந்து ஈரோடு வர நாள் ஒன்றுக்கு 7 ஏழு முறை குளிர்சாதன பஸ் விடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மணிக்கணக்கில் குளிர்சாதன பஸ்சுக்காக காத்திருக்க வேண்டி உள்ளது. எனவே வெயில் காலம் முடியும் வரை ஈரோட்டில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு செல்லும் குளிர்சாதன பஸ்களை 2 மடங்காக அதிகரிக்க வேண்டும்.முக்கிய வழித்தடங்களில் 30 நிமிடத்திற்கு ஒருமுறை குளிர்சாதனம் பஸ் இயக்கும்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதைப்போல் தொலைதூரம் செல்லும் ஒருவருக்கும் வழக்கத்தை விட கூடுதலாக குளிர்சாதன பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து பயணிகள் கூறும் போது,ஈரோடு மாவட்டத்தில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. மதிய நேரம் வெளியே செல்ல முடியாத அளவுக்கு வெயிலின் தாக்கம் இருந்து வருகிறது. இருந்தாலும் பிழைப்புக்காக வெளியே சென்றாக தான் வேண்டும். ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கு செல்லும் போது பெரும்பாலும் பஸ் பயணத்தை நம்பியே இருந்து வருகிறோம். தற்போது வெயிலின் தாக்கம் காரணமாக பஸ் பயணம் என்பது கடும் சாவலாக இருந்து வருகிறது. வெப்ப அனல் காற்று வீசுவதால் பயணிகள் ஆகிய நாங்கள் அவதி அடைந்து வருகிறோம். தற்போது ஈரோடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் குறிப்பிட்ட அளவு குளிர்சாதன பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த எண்ணிக்கையை மேலும் அதிகரித்து கோடை காலம் முடியும் வரை கூடுதலாக குளிர்சாதன பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Similar News