நாகர்கோவில் பள்ளிவிளையில் மத்திய அரசுக்கு சொந்தமான குடோன் ஒன்று உள்ளது. இன்று அதிகாலையில் இந்த பகுதியில் மிளா ஒன்று நடமாடியது. அங்கும் இங்கு ஓடியா மிளா திடீரென குடோனுக்கு எதிர்ப்புறம் அமைந்துள்ள பால்பண்ணை தெரு பகுதியில் நுழைந்தது. அங்கிருந்து ஒரு வீட்டின் மாடியிலே ஏறி அப்படியே சிலை போல் நின்றது. இதனால் மாடி வீட்டுக்குள் இருந்தவர்கள் வெளியே வர முடியாமல் உள்பக்கமாக பூட்டியவாறு இருந்தனர். பொதுமக்கள் விரட்டியும் மிளா நகரவில்லை. அதன் உடலில் காயங்கள் இருந்தன. உடனடியாக இது குறித்து வனத்துறை மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதை அடுத்து வனத்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் வந்து மிளாவை படித்தனர். பின்னர் கால்நடை மருத்துவர் வரவழைக்கப்பட்டு, மிளா உடலில் இருந்த காயத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து வனத்துறையினர் மிளாவை காட்டு பகுதிக்கு கொண்டு சென்றனர். சமீபத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. சுங்கன் கடை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் தீ விபத்து காரணமாக மிளா ஊருக்குள் வந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சுமார் 3 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.