கனமழையால் பாதிக்கப்பட்ட உளுந்து பச்சை பயிறு பருத்தி வகைகளுக்கு
வேளாண் துறை அதிகாரிகள் சேதத்தை ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை;
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியத்தில், நெல்லுக்கு அடுத்தபடியாக உளுந்து, பச்சைப் பயிறு, பருத்தி உள்ளிட்டவை பயிரிடப்படுகின்றன. சம்பா அறுவடை நடைபெறும் போதே, உளுந்து, பயிறு வகைகளை ஜனவரி15 முதல் பிப்ரவரி 15 வரை உளுந்து, பயிறு பயிரிடும் பணிகள் நடைபெறும். இது 60 முதல் 70 நாள் பயிா் என்பதால், மாா்ச் 15 முதல் ஏப்ரல் 15 வரை உளுந்து, பயிறு அறுவடைப் பணிகள் முடிந்து விடுவது வழக்கம். தற்போது, திருமருகல் ஒன்றியத்தில், 25 ஆயிரம் ஏக்கரில் உளுந்து, பயிறும், 5 ஆயிரம் ஏக்கரில் பருத்தி உள்ளிட்டவை சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இதனிடையே, தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நாகை மாவட்டத்தில் 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. தற்போது ஒன்றியம் முழுவதும் உளுந்து, பயிறு பூக்கும், காய்க்கும் நிலையில் உள்ளது. இந்நிலையில், திடீர் கனமழை காரணமாக, சில இடங்களில் பயிா் வகைகள் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளன. திருமருகல், குத்தாலம், எரவாஞ்சேரி, கீழப்பூதனூர், மேலப்புதனூர், பெருநாட்டான்தோப்பு, திருக்கண்ணபுரம், பில்லாளி, வடகரை, கோட்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உளுந்து, பச்சைப் பயிறு சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஆலத்தூர், ஏர்வாடி, சேஷமூலை, அம்பல், பொறக்குடி, வாழ்குடி, திருப்பயத்தங்குடி உள்ளிட்ட பகுதிகளில் பருத்தி பயிர் சாகுபடி மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கடந்த 2 நாட்களாக கனமழை பெய்தது. இந்த மழை காரணமாக, வயலில் மழைநீர் தேங்கி உளுந்து, பயறு, பருத்தி வேர்கள் பாதி அழுகி காணப்படுகின்றன. பச்சைப் பயிறு சாகுபடியில் ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் வரை செலவு செய்யப்பட்டுள்ளது. குவிண்டால் ரூ.6500-க்கு விற்கப்படுவதோடு, ஏக்கருக்கு 3 குவிண்டால் வரை மகசூல் கிடைக்கும். ஆனால், மழை காரணமாக பயிறு, உளுந்து செலவு செய்த தொகைக்கூட கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, வேளாண் துறை அதிகாரிகள், சேதத்தை ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.