மையங்கள் அமைப்பு
ஈரோடு மாவட்டத்தில் பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்துவதற்கு 3 மையங்கள் அமைப்பு;
ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் - 2 பொதுத்தேர்வு கடந்த 3-ந் தேதி தொடங்கியது. இத்தேர்வு வருகிற 25-ம் தேதி வரை நடைபெற உள்ளது. பிளஸ் - 2 பொதுத்தேர்வினை பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் தனி தேர்வர்கள் என மொத்தம் 22 ஆயிரத்து 923 மாணவ -மாணவிகள் எழுதிய வருகின்றனர். இதேபோல் பிளஸ் - 1 பொது தேர்வு கடந்த 5-ந் தேதி தொடங்கியது. இந்த தேர்வு வருகிற 27ஆம் தேதி நிறைவடைகிறது. பிளஸ் - 1 பொதுத் தேர்வினை மாணவ - மாணவிகள், தனித் தேர்வார்கள் என மொத்தம் 24,289 பேர் எழுதி வருகின்றனர். இந்த நிலையில் பிளஸ்-1, பிளஸ் - 2 பொதுத்தேர்வு மதியம் 1.15 மணிக்கு முடிந்ததும் அந்தந்த முதன்மை கண்காணிப்பாளர்கள் மாணவ மாணவிகளின் விடைத்தாள்களை மாவட்டத்தில் அமைக்கப்பட்ட 4 விடைத்தாள் பாதுகாப்பு மையத்திற்கு போலீஸ் பாதுகாப்புடன் எடுத்து செல்வர். அங்கு விடைத்தாள்கள் பாதுகாப்பு அறைக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் மற்றும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. விடைத்தாள் திருத்தும் மையமாக ஈரோடு செங்கோடம்பாளையத்தில் உள்ள யூ ஆர் சி பள்ளி, திண்டலில் உள்ள பிவிபி பள்ளி, கோபி சாரதா பள்ளி அறிவிக்கப்பட்டுள்ளது. விடைத்தாள்கள் திருத்தும் தேதி அறிவிக்கப்பட்டதும், பாதுகாப்பு மையத்திலிருந்து விடைத்தாள்கள் பிற மாவட்டத்திற்கு அனுப்பப்பட்டு வேறு மாவட்ட விடைத்தாள்கள் ஈரோடு விடைத்தாள் திருத்தும் மையத்திற்கு கொண்டுவரப்பட்டு திருத்தப்படும். விடைத்தாள்கள் திருத்தும் பணி நிறைவடைந்ததும் உடனுக்குடன் கணினி மூலம் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யவும் தேவையான முன்னேற்பாடுகள் பணிகள் செய்யப்பட்டுள்ளதாக பள்ளி கல்வித்துறையினர் தெரிவித்துள்ளனர்.