வனதுறையினர் கண்காணிப்பு
தெங்குமரஹாடா அடர்ந்த வனப்பகுதியில் உள்ள ஆதி கருவண்ணராயர் கோவில் மாசி மகம் திருவிழா தொடங்கியது வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு;
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பவானிசாகர் வனச்சரகத்திற்குட்பட்ட தெங்குமர ஹாடா அடர்ந்த வனப்பகுதியில் பழமை வாய்ந்த ஆதி கருவண்ண ராயர் மற்றும் பொம்மதேவி கோவில்கள் அமைந்துள்ளது. இந்தக் கோவில்களில் ஆண்டுதோறும் நடைபெறும் மாசி மகம் திருவிழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் இருந்தும் 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் வருகை தந்து பொங்கல் வைத்து வழிபாடு செய்து கிடாய் வெட்டி நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். வனப்பகுதியில் உள்ள கோவில் என்பதால் வனத்துறையினர் விதித்துள்ள கட்டுப்பாடுகளின் படியே திருவிழா நடத்தப்படுகிறது. இந்தாண்டு திருவிழா நேற்று தொடங்கியது. நாளை (வியாழக்கிழமை) மாலையுடன் திருவிழா நிறைவடைகிறது. இந்நிலையில் நேற்று காலை முதல் கோவிலுக்கு செல்வதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து வாகனங்களில் வந்த பக்தர்கள் பவானிசாகர் அருகே உள்ள காராச்சி கொரை வன சோதனை சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டு வாகனங்களை வனத்துறையினர் தணிக்கை செய்து பின்னர் அனுமதி சீட்டு வழங்கிய பின்னர் அனுமதித்தனர். வனப்பகுதிக்குள் பிளாஸ்டிக் பொருட்கள், மதுபானங்கள், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் போதை வஸ்துக்கள் ஏதாவது உள்ளனவா என சோதனையிட்ட பிறகு வாகனங்கள் அனுமதிக்கப்படுகிறது. 3 நாட்கள் திருவிழா நடைபெறும் நிலையில் உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி நாள் ஒன்றுக்கு 100 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவதாக வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நூறு வாகனங்கள் அனுமதிக்கப்பட்ட பின் மற்ற வாகனங்களில் வரும் பக்தர்கள் பவானிசாகர் அன்னை பூங்கா எதிர்ப்புறம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பகுதியில் வாகனங்களை நிறுத்திவிட்டு வனத்துறை மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் சத்தியமங்கலம் கிளையைச் சேர்ந்த 5 பஸ்களில் இலவசமாக கோவிலுக்கு சென்று வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே கோவில் வளாகத்தில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் முகாமிட்டு விழா ஏற்பாடுகளை கண்காணித்து வருகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆதி கருவண்ண ராயர் கோவில் பகுதியிலும் , வன சோதனை சாவடி பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.