கோவை: ஒய்.டபிள்யூ.சி.ஏ பள்ளி மூடல்? பெற்றோர் முற்றுகை!
கோவை அவினாசி சாலையில் உள்ள ஒய்.டபிள்யூ.சி.ஏ பள்ளி மூடப்பட உள்ளதாக தகவல் பரவியதால் மாணவர்களின் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டனர்.;

கோவை அவினாசி சாலையில் உள்ள ஒய்.டபிள்யூ.சி.ஏ பள்ளி மூடப்பட உள்ளதாக தகவல் பரவியதால் மாணவர்களின் பெற்றோர் நேற்று பள்ளியை முற்றுகையிட்டனர். வ.உ.சி மைதானம் எதிரே அமைந்துள்ள இந்த பள்ளியில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை வகுப்புகள் நடத்தப்படுகின்றன. கொரோனா தொற்றுக்கு முன் 700-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வந்த நிலையில், தற்போது 180-க்கும் குறைவான மாணவர்களே உள்ளனர். இந்த பள்ளியை மூடுவதாக தகவல் பரவியதால், அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளியை தொடர்ந்து நடத்த வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். பள்ளி நிர்வாகம் பெற்றோர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. நிர்வாக காரணங்களை காட்டி, அருகில் உள்ள பள்ளிகளில் மாணவர்களை சேர்த்து விடுவதாக நிர்வாகம் கூறியதாக தெரிகிறது. இதனால் மேலும் அதிருப்தி அடைந்த பெற்றோர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த ரேஸ்கோர்ஸ் போலீசார் பள்ளியில் விசாரணை நடத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து பள்ளி நிர்வாகம் கூறுகையில், பள்ளியை மூடும் எண்ணம் இல்லை. கூடுதல் விவரங்கள் விரைவில் தெரிவிக்கப்படும் என்று தெரிவித்தனர்.