கோவை: முத்ரா கடன் மோசடி- மக்களே உஷார்!
முத்ரா யோஜனா கடன் திட்டத்தை பயன்படுத்தி பணம் பெற்று தருவதாக கூறி மோசடி நடைபெறுவதாக சைபர் கிரைம் எச்சரிக்கை.;
மத்திய அரசின் பிரதம மந்திரி முத்ரா யோஜனா கடன் திட்டத்தின் கீழ், தொழில் முனைவோருக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படுகிறது. ஆனால், சமீபகாலமாக இந்தத் திட்டத்தை பயன்படுத்தி ஒரு கும்பல் மோசடியில் ஈடுபட்டு வருகிறது. அவர்கள் பொதுமக்களை தொடர்பு கொண்டு, முத்ரா கடன் பெற்று தருவதாக கூறி ஆதார், பான் கார்டு போன்ற ஆவணங்களை பெற்றுக்கொள்கின்றனர். பின், கடன் தொகைக்கு கமிஷன் கொடுக்க வேண்டும் என பணம் கேட்கின்றனர். பணம் கிடைத்ததும், கடனும் கிடைக்காது, பணமும் திரும்ப கிடைக்காது. கோவையில் இதுபோன்ற மோசடியில் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். சமீபத்தில் ஒரு பெண்மணிக்கு 5 லட்சம் கடன் பெற்று தருவதாக கூறி, 1 லட்சம் கமிஷன் பெற்றுள்ளனர். மேலும் 1 கோடி வரை பெற்றுத்தருவதாக கூறி, 8 லட்சம் வரை மோசடி செய்துள்ளனர். சைபர் கிரைம் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். யாரிடமாவது பணம் கொடுத்து, கடன் பெற்று தருகிறோம் என்று கூறினால், அது மோசடியாக இருக்க வாய்ப்புள்ளது. மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று சைபர் கிரைம் போலீசார் இன்று பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.