கோவை: உயர் ரக போதை மருந்து கடத்திய வாலிபர் கைது !
கோவை ரயில் நிலையத்தில் மெத்தாம்பெட்டமைன் வைத்திருந்த வாலிபர் கைது.;
ரயில்கள் மூலம் போதைப் பொருள் கடத்தப்படுவதாக கோவை போதை பொருள் தடுப்பு பிரிவு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, மத்திய ரயில்வே பாதுகாப்பு காவல் துறையினருடன் இணைந்து, போதைப் பொருள் தடுப்பு பிரிவு உதவி ஆய்வாளர் ஜெசிஸ் உதயராஜ் தலைமையிலான குழுவினர், கோவை ரயில் நிலையத்தில் நேற்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பெங்களூரில் இருந்து கேரளா செல்லும் ரயிலில் வந்த முகமது சினான் ( 19) என்ற வாலிபர் சந்தேகத்திற்கு இடமான வகையில் கோவை ரயில் நிலையத்தின் வடக்கு பகுதியில் சுற்றித் திரிந்தார். அவரை தடுத்து நிறுத்தி போதைப் பொருள் தடுப்பு பிரிவு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். சோதனையில், முகமது சினானிடம் இருந்து 150 கிராம் மெத்தாம்பெட்டமைன் என்ற உயர் ரக போதைப் பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், முகமது சினான் கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டம், காயங்குளத்தைச் சேர்ந்தவர் என்பதும், தனது நண்பருடன் பெங்களூரில் இருந்து கோவை வழியாக கேரளாவுக்கு போதைப் பொருள் கடத்தி விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து, முகமது சினானை கைது செய்த காவல் துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், அவருடன் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட மற்ற நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.