கோவை: இந்திய ராணுவத்தின் துப்பாக்கி, பீரங்கி கண்காட்சி !
கோவை மாவட்டம், அரசூரில் உள்ள தனியார் கல்லூரியில் இந்திய ராணுவத்தின் சார்பில் துப்பாக்கி மற்றும் பீரங்கி கண்காட்சி நடைபெற்றது.;
கோவை மாவட்டம், அரசூரில் உள்ள தனியார் கல்லூரியில் இந்திய ராணுவத்தின் சார்பில் துப்பாக்கி மற்றும் பீரங்கி கண்காட்சி இன்று நடைபெற்றது. மதுக்கரையில் உள்ள ராணுவ முகாமிலிருந்து வருகை தந்த ராணுவ வீரர்கள், ராணுவத்தில் பயன்படுத்தப்படும் பல்வேறு வகையான துப்பாக்கிகள் மற்றும் பீரங்கிகளை காட்சிப்படுத்தினர். குறிப்பாக, ராணுவ வீரர்கள் பயன்படுத்தும் அதிநவீன துப்பாக்கிகள், இலகுரக மற்றும் கனரக பீரங்கிகள் ஆகியவை மாணவர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. ராணுவ வீரர்கள், ஒவ்வொரு ஆயுதத்தின் பயன்பாடு, அதன் தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் செயல்பாடு குறித்து மாணவர்களுக்கு விளக்கமளித்தனர். மேலும், ஆர்வமுள்ள மாணவர்களுக்கு துப்பாக்கிகளை கையாளுவது மற்றும் அவற்றை இயக்குவது குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் ஆயுதங்களை பார்வையிட்டதுடன், சிலவற்றை தாங்களே இயக்கிப் பார்த்தும் மகிழ்ந்தனர். கண்காட்சியில் பங்கேற்ற மாணவ மாணவிகள், ராணுவத்தில் பயன்படுத்தப்படும் அதிநவீன ஆயுதங்களை நேரில் கண்டது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும், அவற்றை பயன்படுத்திப் பார்த்தது ஆச்சரியமாக இருந்ததாகவும் தெரிவித்தனர்.