நீதிமன்ற நடவடிக்கைகளை பார்வையிட அனுமதி அளித்த மாவட்ட நீதிபதி
நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விவாதம், சாட்சி விசாரணையை பார்வையிட்ட மாணவர்கள்;
8-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடநூலில், நீதித்துறை என்று ஒரு பாடம் வந்துள்ளது. அந்தப் பாடத்தை கற்ற மாணவர்கள் நீதிமன்ற நடவடிக்கைகளை பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தனர். மாணவர்கள் கூட்டாக சேர்ந்து நாகை மாவட்ட நீதிபதிக்கு, நீதிமன்றத்தை பார்வையிட அனுமதி கோரி கடிதம் எழுதியிருந்தனர்.அந்த கடிதத்தை பார்வையிட்ட, நாகை மாவட்ட நீதிபதி, மாணவர்களுக்கு கடந்த 19-ம் தேதி அன்று நீதிமன்றத்தை பார்வையிட அனுமதி அளித்திருந்தார். ஒரத்தூர் சிதம்பரனார் நடுநிலைப்பள்ளியை சேர்ந்த 8-ம் வகுப்பு பயிலும் 20 மாணவ, மாணவிகள் குறிப்பிட்ட நேரத்திற்கு நீதிமன்றத்திற்கு சென்று, முன்சீப் கோர்ட்டில் நீதிபதி ராமச்சந்திரன் முன்னிலையில் நடைபெற்ற வழக்கு விவாதம், சாட்சி விசாரணை ஆகியவற்றை நேரில் கண்டனர். பின், நீதித்துறை மற்றும் நீதிமன்றம் குறித்த மாணவர்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கு, அரசு வழக்கறிஞர் சிவகுருநாதன், தனது அலுவலகத்தில் விளக்கம் அளித்தார். அப்போது அவர், மாணவர்கள் எதிர்காலத்தில் உயர் கல்வி பயில்வதற்கு, வழக்கறிஞர் தொழிலையும் குறிக்கோளாக கொள்ளலாம் என தெரிவித்தார். நிகழ்ச்சியில், தலைமையாசிரியர் சிவா, பட்டதாரி ஆசிரியர்கள் பாலசண்முகம் மற்றும் நித்யா ஆகியோர் மாணவர்களை பாதுகாப்பாக அழைத்து சென்றனர்.