மானம்கொண்டான் ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்க அளவீடு பணி

மண் பரிசோதனை பணி நிறைவுற்றதும் விரைவில் பாலம் அமைக்கும் பணி தொடக்கம்;

Update: 2025-03-20 04:22 GMT
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கருப்பம்புலம் ஊராட்சியில், தெற்கு காடு பகுதிக்கு செல்லும் புளிய மரத்தடியில், மானங்கொண்டான் ஆற்றில், தரை பாலத்தின் வழியாக சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் சென்று வருகின்றனர். இந்த தரைபாலத்தின் வழியாகத்தான் ஆறு பொது மயானங்களும், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களும் சென்று வருகின்றனர். மழைகாலங்களில் அந்த சாலையில் உள்ள தலைப்பாலம் முழுகும் நிலை ஏற்படும். மேலும், தரை பாலமாக இருப்பதால் கடலுக்குச் செல்ல வேண்டிய மாணங்கொண்டான் ஆற்றின் வழியாக, மழைநீர் செல்ல முடியாமல் ஆற்றை முழுவதும் ஆகாயத்தாமரை படர்ந்து காணப்படுவதால், மழை நீர் வடிய முடியாமல் தேங்கி நிற்கும். எனவே, தரைப்பாலத்தை உயர்மட்ட கான்கிரீட் பாலமாக அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சுப்புராமனிடம் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சுப்பராமன், ஊராட்சி மன்ற தலைவர் ஆக இருந்த காலகட்டத்தில் இந்த தரைபாலத்தை உயர்மட்ட பாலமாக உயர்த்தி தர அரசுக்கு ஊராட்சி மூலம் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி இருந்தார். அதன் பேரில், தற்போது இந்த பாலம் அமைப்பதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது. முதற்கட்டமாக, பாலம் கட்டும் பணிக்கு அளவீடு செய்யும் பணி நடைபெற்றது. இப்பணியில், ஊராட்சி ஒன்றிய பொறியாளர்கள் மணிமாறன், கோவிந்தராஜ், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் சுப்புராமன் மற்றும் முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அளவீடு பணி முடிந்ததும், அடுத்த கட்டமாக மண் பரிசோதனை பணி நடைபெற்று, விரைவில் பாலம் அமைக்கும் பணி நடைபெறும் என ஊராட்சி ஒன்றிய பொறியாளர் தெரிவித்துள்ளார்.

Similar News