எட்டயபுரம் வட்டத்தில் ஆட்சியர் க.இளம்பகவத் ஆய்வு!

உங்களைத் தேடிஉங்கள் ஊரில் திட்டம் திட்டத்தின் கீழ் எட்டயபுரம் வட்டத்தில் அரசின் பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், சேவைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் கள ஆய்வு மேற்கொண்டார்.;

Update: 2025-03-20 07:15 GMT
தமிழ்நாடு முதலமைச்சர் அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்குதடையின்றி விரைந்து மக்களை சென்றடைவதை உறுதிசெய்திட வேண்டுமென்ற உன்னத நோக்கத்தின் அடிப்படையில் ஒவ்வொரு வட்டத்திலும் உள்ள மக்களை நாடி அவர்களின் குறைகளைத் தீர்க்க தொடங்கப்பட்ட ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ் இன்று எட்டயபுரம் வட்டத்தில் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், கள ஆய்வு மேற்கொண்டார். அதன்படி, எட்டயபுரம் வட்டம், சோழபுரம் கிராமத்தில் கலைஞரின் கனவு இல்லம் (KKI-2024-25) திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் இரண்டு வீடுகளின் கட்டுமானப் பணிகளையும், கழுகாசலம் ஊராட்சியில் தமிழ்நாடு மாநில வேளாண்மை விற்பனை வாரியம் மூலம் பல்நோக்கு உலர்களம் தரம் பிரிப்புக் கூடத்தினையும், விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம் நீராவிபுதுப்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் குழந்தைகள் நட்பு பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் (CFSIDS-2024-25) மூலம் கட்டப்பட்டு வரும் கணினி அறைகளின் கட்டுமானப் பணிகளையும் கள ஆய்வு செய்தார். தொடர்ந்து, தங்கம்மாள்புரத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் தேசிய எண்ணெய் வித்து இயக்கம் 2024-25 கீழ் சூரியகாந்தி முதல்நிலை செயல் விளக்கத்திடலையும், வேளாண்மை நலத்துறை சார்பில் தலைக்காட்டுபுரம் வேளாண்மை பொறியியல் துறையின் தனிப்பட்ட அடிப்படையிலான மானிய (SMAM-2021-22) திட்டத்தின் கீழ் கிராம அளவிலான வேளாண் கருவிகள் வாடகை மையம் மூலம் உழவு இயந்திரம் மற்றும் பல்வகை பயிர் கதிரடிக்கும் இயந்திரத்தை பயனாளிக்கு வழங்கினார், தலைக்காட்டுபுரம் ஊராட்சியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மைத்தில் ஆய்வு மேற்கொண்டு குழந்தைகளுடன் கலந்துரையாடினார். மேலும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் ஒருங்கிணைந்த பண்ணையம் செயல் விளக்கத் திடல்களில் மண்புழு உரம் தயாரிக்கப்பட்டுள்ளதைப் பார்வையிட்டார். அடுத்ததாக பேரிலோவன்பட்டி ஊராட்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பார்வையிட்டு கள ஆய்வு செய்தார். அடுத்ததாக, முத்தலாபுரம் ஊராட்சியில் நீர்வளத்துறை சார்பில் நம்பிபுரம் கால்வாயில் நீர் விநியோகத்தை உறுதி செய்வதற்காக வைப்பாறு ஆற்றின் குறுக்கே அணைக்கட்டு கட்டுவதற்கான இடத்தினையும், தாப்பாத்தி ஊராட்சியில் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு மையத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் கட்டப்பட்டு வரும் வீடுகளின் கட்டுமானப் பணிகளையும், அயன் வடமலாபுரம் ஊராட்சியில் கூட்டுறவுத்துறையின் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் ஆகியவற்றில் மாவட்ட ஆட்சியர் கள ஆய்வு மேற்கொண்டார். அடுத்தபடியாக எட்டயபுரம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களிடமிருந்து 250 கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு, அவர்களின் கோரிக்கைகள் குறித்து கனிவுடன் கேட்டறிந்தார்கள். பின்னர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் இ-பட்டாக்கள், விதவை உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை என 50 பயனாளிகளுக்கும், வேளாண்மைதுறை சார்பில் 20 பயனாளிகளுக்கு வேளாண் இடுபொருட்களையும் வழங்கினார். பின்னர், எட்டயபுரம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட அளவிலான அனைத்துத்துறை அலுவலர்களுடன் முற்பகலில் மேற்கொண்ட களப்பயணங்கள், அலுவலக ஆய்வுகள் குறித்து கேட்டறிந்து மற்றும் பெறப்பட்ட கோரிக்கை மனுக்களில் உள்ளவை தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்டார். தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ள நலத்திட்டங்கள் மற்றும் சேவைகள் எட்டயபுரம் வட்டத்தில் தங்கு தடையின்றி விரைந்து மக்களை சென்றடைவதை மாவட்ட அளவிலான அனைத்துத்துறை அலுவலர்கள் உறுதி செய்து ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமென மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டார். இந்த ஆய்வின்போது, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) செல்வி.இரா.ஐஸ்வர்யா,, மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இரவீந்திரன், கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் க.மகாலட்சுமி, சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியர் ஹபிபூர் ரஹ்மான், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் ராஜேஷ், மாவட்ட சுகாதார அலுவலர் (கோவில்பட்டி) மருத்துவர் வித்யா விஸ்வநாதன், எட்டயபுரம் வட்டாட்சியர் சுபா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், எட்டயபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Similar News