கோவை: பட்டப்பகலில் இருசக்கர வாகனம் திருடிய இருவர் கைது !
வேலைசெய்யும் இடத்தில் நிறுத்தி இருந்த இருசக்கர வாகனம் திருட பட்டதில் இருவர் கைது.;
சூலூர் சின்னியம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் கரையான்பாளையம் ஹம்மல் கனெக்டர் சிஸ்டம்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் தனது இருசக்கர வாகனத்தை நிறுவனத்தில் நிறுத்திவிட்டு சென்ற நிலையில், பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது வாகனம் காணாமல் போனது. உடனடியாக, சீனிவாசன் மற்றும் அவரது உடன் பணிபுரிபவர்கள் அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது கரையான்பாளையத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த கருப்பசாமி (39) மற்றும் கிஷோர் (24) ஆகிய இருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். விசாரணையில், மதுரையைச் சேர்ந்த பெயிண்டர்களான கருப்பசாமி மற்றும் கிஷோர் ஆகியோர் சீனிவாசனின் வாகனத்தை திருடியது தெரியவந்தது. இதையடுத்து, சீனிவாசன் தனது உடன் பணிபுரிபவர்களான வேலுமணி மற்றும் மதன் ஆகியோரின் உதவியுடன் கருப்பசாமி மற்றும் கிஷோர் ஆகிய இருவரையும் சூலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். சீனிவாசன் அளித்த புகாரின் பேரில் சூலூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, இருவரையும் நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.