குமரி மாவட்டம் பார்வதிபுரம் அருகே கீழ்ப்பெரு வினையை சேர்ந்தவர் அருள்தாஸ் (54). தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை வேலைக்கு செல்வதற்காக பார்வதிபுரத்திலிருந்து போட்டியோடு நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தார். சுங்கான்கடை பகுதியில் செல்லும் போது எதிரே அதி வேகமாகவும், அஜாக்கிரதையாகவும், தவறான பாதையில் வந்த பைக் ஒன்று அருள் தாஸ் பைக் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் தூக்கி வீசப்பட்டு அவருக்கு உடலில் பல்வேறு இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அக்கம்பக்கத்தினர் ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அவரது மனைவி விஜிலா ராணி என்பவர் இரணியல் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற பைக் ஓட்டுனரை அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து தேடி வருகின்றனர்.