நிலக்கடலையை அரசே ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மூலம் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்

குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை ;

Update: 2025-03-21 17:18 GMT
தஞ்சாவூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமையன்று விவசாயிகள் குறைதீர்க்கூட்டம் நடைபெற்றது.  கூட்டத்துக்கு கோட்டாட்சியர் செ.இலக்கியா தலைமை வகித்தார். இதில் பூதலூர், திருவையாறு, தஞ்சாவூர், ஒரத்தநாடு வட்டார விவசாயிகள், அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது: சம்பா, தாளடி முடிவடைந்துள்ள நிலையில் தற்போது வயல்களில் மண் வளத்தை பெருக்க வேளாண்துறை மூலம் பசுந்தாள் விதைகளை இலவசமாக வழங்க வேண்டும். அதே போல் மண் பரிசோதனை, நீர் பரிசோதனையை அந்தந்த கிராமங்களிலேயே நேரில் சென்று வேளாண்மைத்துறை சார்பில் நடத்த வேண்டும். தஞ்சாவூர் மாவட்டத்தில் கோடை நெல் சாகுபடி பெருமளவு மேற்கொள்ளப்பட்டுள்ளதால், மும்முனை மின்சாரம் 16 மணி நேரம் தட்டுப்பாடு இல்லாமல் வழங்க வேண்டும். கடந்த டிசம்பர் மாதம் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். அதே போல் பயிர் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு தொகையை உடன் வழங்க வேண்டும். இந்த வருடம் ஜூன் மாதம் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளதால், டெல்டா மாவட்டங்களில் தூர் வாரும் பணியை உடன் தொடங்கி தண்ணீர் வருவதற்குள் முடிக்க வேண்டும். தஞ்சாவூர் மாவட்டத்தில் மானாவாரி பகுதிகளில் நிலக்கடலை அறுவடை நடைபெற்று வருகிறது. 80 கிலோ கொண்ட கடலை தனியார் வியாபாரிகள் ரூ.7,500- க்கு கொள்முதல் செய்கின்றனர். உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதால், இந்த விலை போதாது. எனவே, கடலையை அரசே ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மூலம் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  விவசாயிகள் தற்போது தங்களது நில விபரங்களை இணையதளம் மூலம் பதிவு செய்து வருகின்றனர். இலவசமாக பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்ட நிலையில், இ-சேவை மையங்களில் கட்டணங்கள் வசூலிப்பதை தடுக்க வேண்டும். காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டுவில் கர்நாடக அரசு அணை கட்டுகிறது. ஆனால், தமிழக அரசு இந்த திட்டத்தை எதிர்ப்பதாக தெரிவியவில்லை. எனவே, டெல்டா விவசாயிகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தமிழக அரசு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். திருக்காட்டுப்பள்ளி அருகே காவிரி ஆற்றில் பிரியும் புதுவாய்க்கால் புதுச்சத்திரம், விஷ்ணம்பேட்டை, விட்டலபுரம், வடுக்குடி வழியாக 8 கி.மீட்டர் தூரம் சென்று கொள்ளிடம் ஆற்றில் கலக்கிறது. இந்த வாய்க்காலில் கரைகளை செங்கல் சூளை நடத்துபவர்கள் வெட்டி கரைகளில் இருந்த மண்ணை எடுத்துவிட்டனர். தற்போது இந்த வாய்க்கால் காணாமல் போய்விட்டது. இந்த வாய்க்காலை மீட்டு மீண்டும் அந்த பகுதியில் 10 ஆயிரம் ஏக்கர் பாசனத்துக்கு பயன்படும் வகையில் மாற்றிதர வேண்டும். அதே போல், திருவையாறு கல்யாணபுரம் அருகே கல்யாணி வாய்க்கால் 20 அடி அகலம் இருந்தது. ஆக்கிரமிப்புகளால் தற்போது 3 அடியாக குறைந்து விட்டது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும்" என கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர். கூட்டத்தில், பாச்சூரைச் சேர்ந்த புண்ணியமூர்த்தி என்ற விவசாயி, "நான் நான்கு ஆண்டுகளாக பாச்சூர் கிராமத்தில் உள்ள ஏரியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றுமாறு கோரிக்கை விடுத்து வருகிறேன். இதற்கு நடவடிக்கை ஏதும் இல்லாததால், கூட்டத்தை விட்டு வெளிநடப்பு செய்வதாக கூறி வெளியேறினார். விவசாயிகளின் கோரிக்கைகள் அனைத்தும் மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய தீர்வு காணப்படும் என கோட்டாட்சியர் உறுதியளித்தார்.

Similar News